அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’. கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'குட்நைட்' திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் ’ஒன்ஸ் மோர்’ படத்தையும் தயாரிக்கிறது.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நான்னா' முதலிய படங்களுக்கு இசையமைத்த பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகி, அதில் இடம்பெற்ற அர்ஜுன் தாஸ்-அதிதி ஷங்கர் இடையேயான உரையாடலில் “இளையராஜாவா அல்லது ஏஆர் ரஹ்மானா” என்ற கேள்விக்கு “ஹாரிஸ் ஜெயராஜ்” என்றும், “ஷங்கரா அல்லது மணிரத்னமா?” என்ற கேள்விக்கு “கே.பாலச்சந்தர்” என்றும், “லவ் மேரேஜ்ஜா? அல்லது அரேஞ்ச் மேரேஜ்ஜா?” என்ற கேள்விக்கு “நோ மேரேஜ்” என்றும் அர்ஜுன் தாஸ் பதிலளிக்கும் டைட்டில் டீசர் வீடியோவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதுமட்டுமல்லாமல் அதில் இடம்பெற்ற ’வா படபட படவென எந்தன் கண்ணம்மா’ என்ற பாடல் கவனம்பெற்ற நிலையில், தற்போது அந்த பாடல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் ’ஒன்ஸ் மோர்’ படத்தின் எதிர்ப்பார்க்கப்பட்ட பாடலாக ’வா கண்ணம்மா’ பாடலை மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது.
பாடலை பொறுத்தவரை விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் இருவரும் பாடியுள்ளனர். ‘வா படபட படவென எந்தன் கண்ணம்மா, இதுவே திருநாள் இதயம் தரும்நாள்’ என வரிகள் அழகாகவும், அதற்கான காட்சியமைப்புகளில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கரின் பெண்பார்க்கும் படலும், காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாடல், காதல் வழியும் வரிகளோடு காதலர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.