நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் திருமண வாழ்க்கை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். “விஜயை 1,000 முறை Propose செய்வேன்” என்று கூறிய அவர், திருமணம் என்பது காதல் முன்மொழிவு மட்டுமல்ல, வாழ்க்கையை உருவாக்கும் முக்கியமான முடிவு என விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர் - M.மீரா
நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடனான திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “விஜயை மீண்டும் மீண்டும் Propose செய்வேன். அவரை 1,000 முறை Propose செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியின் 9-வது சீசனில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டனர். அப்போது, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தது எப்படி என்பது குறித்து பேசினர். திருமணம் குறித்து முதலில் தான்தான் விஜயிடம் பேசியதாக ராஷ்மிகா தெரிவித்தார். ஆனால், முடிவெடுக்க விஜய் ஒரு வருடம் எடுத்துக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், தங்களது பேச்சைத் தவறாகப் புரிந்துகொண்டு பலரும் விமர்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். திருமணம் என்பது வெறும் காதல் முன்மொழிவு அல்லது மோதிரம் அணிவிப்பது மட்டுமல்ல; ஒன்றாக வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதுதான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் மனதளவில் தெளிவாக இருந்தேன். ஆனால், வாழ்க்கையின் நடைமுறை விஷயங்களை யோசித்து முடிவெடுக்க விஜய் நேரம் எடுத்துக்கொண்டார். அதனால் எங்கள் காதலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நான் உணர்ச்சிவசப்படுபவள்; அவர் நிதானமாகச் சிந்திப்பவர். இருவரும் ஒருவருக்கொருவர் தேர்வு செய்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.
தனது வாழ்க்கையில் கடினமான காலகட்டங்களில் விஜய் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இணையத்தில் வரும் தவறான தகவல்களையும் எடிட் செய்யப்பட்டவீடியோக்களையும் நம்புவதைவிட, என் வாழ்க்கையைப் பற்றி நான் சொல்வதை நம்புங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தனது குடும்பத்தினரை இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். தங்களது காதல் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தானும் விஜயும் தொடர்ந்து ஒருவரையொருவர் காதலிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.