பைசன் படத்தை பாராட்டிய இயக்குநர் சரவணன் web
சினிமா

“முன்னேறி மேல போங்கப்பா..” என நம் முதுகிலும் தட்டி அனுப்புகிறது ‘பைசன்’ - நந்தன் இயக்குநர் பாராட்டு

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் பைசன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார் நந்தன் திரைப்படத்தின் இயக்குநர் சரவணன்..

Rishan Vengai

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்திருக்கும் பைசன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார் நந்தன் திரைப்படத்தின் இயக்குநர் சரவணன்..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா, அனுபமா நடித்து வெளியாகியுள்ள படம் `பைசன்'. இப்படம் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பைசன்

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நந்தன் படத்தின் இயக்குநர் சரவணன் பைசன் படத்தையும், படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜையும் பாராட்டி பேசியுள்ளார்..

போராட்டக்காரனால் மட்டும்தான் இப்படி படம் செய்யமுடியும்..

பைசன் திரைப்படம் குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நந்தன் பட இயக்குநர் சரவணன், தன்னுடைய இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு ‘பைசன்’ படம் கூடுதல் பொறுப்பாக செயல்பட என்னை நிர்பந்தித்துள்ளது என்றும், மீண்டும் சில காட்சிகளை படமாக்க இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

நந்தன்

இதுகுறித்த அவருடைய பதிவில், ‘நந்தன்’ படத்திற்குப் பிறகு இன்னொரு படத்தை இயக்கி இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறேன். இன்றுதான் ‘பைசன்’ பார்த்தேன்.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்தக் கதை மாந்தர்களில் ஒருவனாகக் கலந்துவிட்டேன். படம் முழுக்க தவிப்பும் கேள்வியுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற கிட்டானின் மூச்சு எனக்குள்ளும் இரைக்கத் தொடங்கியது. இதுதான் கதை என்கிற நேர்க்கோட்டை மட்டுமே பார்த்துப் பயணிக்கிற படங்களுக்கு மத்தியில், ஒரு களத்தின் மொத்தத்தையும் காட்சிப்படுத்தி, எல்லோர் வாழ்வையும் பந்தி வைத்து, அதன் வழியே கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் திகைக்க வைக்கிறார். மிகப்பெரிய போராட்டக்காரனால் மட்டுமே இத்தகைய கதைகளை எவர் மதிப்பீட்டுக்கும் பயப்படாமல் எடுக்க முடியும். முண்டித் துடித்து முன்னேறப் பாயும் மனிதர்களைச் சாதியும் அதையொட்டிய கொடுவினைகளும் எப்படியெல்லாம் கூறு போடுகின்றன என்பதைப் பொளேரெனப் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதுகாலம் வரை சாதிய வலியைச் சொன்ன படங்களுக்கும் ‘பைசன்’ ஆக்கத்திற்கும் நிறைய வேறுபாடு. முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் வலியைத் தராசு முள்ளாக நின்று முன்வைத்திருக்கும் விதம் அற்புதமானது.

சமூகம் சார்ந்து படம் செய்கிறவர்கள் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டும் என்பதற்கும் ‘பைசன்’ நல்ல முன்னுதாரணம். பரிட்சைக்குப் போகும் கடைசி நிமிடம் வரை புத்தகம் புரட்டும் மாணவனைப் போல் ஒரு படத்தின் நூலளவு இடத்தில்கூட சமூகக் கூறுகளை நுழைத்துக் காட்டி, “முன்னேறி மேல போங்கப்பா…” என நம் முதுகிலும் தட்டி அனுப்புகிறது ‘பைசன்’ படம்.

மகத்தான படைப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரித்த இயக்குநர் ரஞ்சித், உறுதுணையாக நின்ற அத்தனை உள்ளங்களும் கொண்டாடத்தக்கவர்கள்.

நந்தன் பட இயக்குநர் சரவணன்

‘பைசன்’ பார்த்த நெகிழ்வில் தற்போது நான் இயக்கி முடித்திருக்கும் படத்தை இன்னும் ஐந்து நாட்கள் கூடுதலாக எடுக்க நினைக்கிறேன். அந்தளவுக்குப் பொறுப்பையும் போராட்டத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது ‘பைசன்’! ஒரு படம் இதைவிட வேறென்ன பண்ண வேண்டும்? என பாராட்டி எழுதியுள்ளார்.