’வேலியன்ட்’ எனும் சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய இளையராஜா தொடர்ந்து அடுத்த சிம்பொனிக்கான இசைக்குறிப்புகளை எழுத உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இசை உலகின் ராஜாவாக வலம் வரும் இளையராஜா, கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் தனது வேலியண்ட் சிம்பொனியை (ஒரு கதை, சம்பவம் அல்லது நிகழ்வை அடிப்படையாக வைத்து அதனை வார்த்தைகளின்றி வெறும் வாத்தியங்கள் மூலம் நான்கு பகுதிகளாக இசை வடிவத்தில் விளக்குவது சிம்பொனியாகும்) அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், மேற்கத்திய கிளாஸிக்கல் பாணி சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றிய முதல் ஆசிய நாட்டவர் என்ற முத்திரையையும் அவர் பதித்தார். அவரது சிம்பொனி தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது. சிம்பொனியை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய இசைஞானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு பாராட்டு விழாவும் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ’வேலியன்ட்’ எனும் சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய இளையராஜா தொடர்ந்து அடுத்த சிம்பொனிக்கான இசைக்குறிப்புகளை எழுத உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளான இன்று அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தாய் சின்னத்தாயின் நினைவு தினத்திற்காக அவருடைய நினைவு இல்லம் அமைந்துள்ள லோயர் கேம்பிற்கு பயணித்தபோது இதுதொடர்பாக காணொளி ஒன்றை பதிவுசெய்து வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைக் கூறும் இளையராஜா,அதனைத் தொடர்ந்து சிம்பொனிஎழுதப் போவதாகவும் கூறுகிறார். ”இது ரசிகர்களுக்கு தனது தீபாவளி பரிசு” எனவும் ராஜா குறிப்பிட்டுள்ளார்.