இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தேனிசைத் தென்றல் தேவா, 76 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். 36 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, கானா பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் இசை ஜாம்பவான்களில் ஒருவராக வலம் வந்தவர் தேனிசைத் தென்றல் தேவா. தன்னுடைய சினிமா வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே தொடங்கிய தேவா, மனசுக்கேத்த மகராசா திரைப்படத்தின் மூலம் 1989ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அவருடைய இரண்டாவது திரைப்படம் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் இசைமூலம் பட்டித்தொட்டியெங்கும் புகழ்பெற்றார் தேவா.
ஒருபக்கம் இளையராஜா மறுபக்கம் ஏஆர் ரஹ்மான் இருவரும் கோலோச்சிக்கொண்டிருந்த நேரத்தில் கானா என்ற எளியமக்களின் குரலை பாடலாக பதியவைத்த தேவா எல்லோருக்கும் நெருக்கமான இசையை கொடுப்பதில் கைத்தேர்ந்தவராக மாறினார். 36 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கானா மட்டுமில்லாமல் பல மெலோடிகள், வெஸ்டர்ன் பாடல்கள் என அனைத்துவிதமான ஜார்னரிலும் பாடல்களை கொடுத்துள்ளார் தேவா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் தேவா, ரஜினியுடன் இணைந்து அண்ணாமலை, பாட்ஷா என்ற காலத்திற்கும் அழியாத படங்களை கொடுத்தவர். அதுமட்டுமில்லாமல் அஜித்துக்கு ஆசை, காதல் கோட்டை, வாலி, விஜய்க்கு நினைத்தேன் வந்தாய், குஷி போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
கமலுடன் அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம் போன்ற படங்களுக்கும், விஜயகாந்த் உடன் என் ஆசை மச்சான், செந்தூரபாண்டி, சொக்கத்தங்கம், வீரம் விளைஞ்ச மண்ணு, கள்ளழகர் போன்ற படங்களில் மறக்கமுடியாத பாடல்களை கொடுத்துள்ளார்.
அதேபோல பொற்காலம் திரைப்படத்தில் தேவா இசையில் வெளிவந்த 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடல் மறைந்த சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர். நாதனின் இறுதிச் சடங்கில் ஒலிக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்தது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தேவாவிற்கு சிறப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. செப்டம்பர் 2025ல், ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் மற்றும் ஆஸ்திரேலிய அரசு இணைந்து அவருக்கு இந்த சிறப்பை வழங்கின. இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கையில் (Speaker's chair) அமரவைக்கப்பட்டு, நாடாளுமன்ற செங்கோல் (Sceptre) அவரிடம் வழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் 76 வயதான இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், காலை 8.30 மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அவருடைய இழப்பு திரைத்துறையினரை கடந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.