பாக்யராஜ் மறைவு| “இறுதி அஞ்சலியை கூட நிம்மதியாக செய்ய முடியவில்லை..” ராதிகா சரத்குமார் வேதனை!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், எழுத்தாளர் கே.பாக்யராஜ் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 73 வயதில் மறைந்த அவருக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதி அஞ்சலி நடைபெற்றது. 50 ஆண்டுகால நண்பரான ராதிகா சரத்குமார், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் அத்துமீறல் காரணமாக இறுதி அஞ்சலியையும் நிம்மதியாக செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், சிறந்த திரைக்கதை ஆசிரியருமான கே.பாக்யராஜ் திடீர் உடல்நலக்குறைவால் தன்னுடைய 73 வயதில் இயற்கை எய்தினார். நல்ல உடல்நலனுடன் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த அவர், மறுநாள் திடீரென இறந்த செய்தி அனைத்து திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஜூன் 27ஆம் தேதி மறைந்த அவருடைய உடலுக்கு ஜூன் 28ஆம் தேதி பெசன்ட் நகர் மின் மயானத்தில் 11 மணிபோல இறுதி அஞ்சலி செய்யப்பட்டது.
இந்தசூழலில் தான் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை கூட நிம்மதியாக செய்ய முடியவில்லை என்று ராதிகா சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ராதிகா சரத்குமார், “50 ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி, சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி, குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பசகிதமாக பழகிய நாட்களை நினைவுகூறுகிறோம்.
அவரது இந்த தீடீர் பிரிவு குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் பேரதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் திருமதி.குஷ்பு அவர்களின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், திடீரென மறைந்தார், இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அவரை இழந்து தவிக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனவேதனையோடு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடம் ஒரு அமைதி இல்லாமல், நிம்மதி இல்லாமல் மனதார அந்த ஆத்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் நடந்த சில நிகழ்வுகள் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது.
சமூக வலைதள தாக்கம், உடனுக்குடன் செய்திகளை தந்து யார் முதலிடம் பிடிக்கிறார்கள், அழுகையை எந்த அளவிற்கு zoom செய்து காட்டி ஏற்ற வாசகம் போட்டு அதிக பார்வையாளர்களை கவர்கிறார்கள் என்று போட்டி போடுவதால், மனிதர்களின் யதார்த்தமான உணர்வுகளை மதிக்க இயலாமல், புரிதல் இல்லாத சமூகமாக இச்சமூகம் தள்ளப்படுகிறதோ என்ற ஐயத்துடன் யோசிக்க தோன்றுகிறது.
வருங்காலத்தில் இதே நிலை தொடர்வது தமிழர்களின் மானுட வாழ்வியல், பாரம்பரிய, கலாச்சாரத்திற்கு நல்லதல்ல. சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஒருபுறம் இருந்தாலும், அங்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் சமூகத்தில் இனி நடைபெறாமல் தடுத்திடல் வேண்டும்.
அரசும், திரைலகமும் இணைந்து, துக்கம் அனுசரிக்கும் இடங்களில் கண்ணியமும், மரியாதையும் வழிமுறைகளை வகுத்து காக்கும் நடைமுறைப்படுத்த அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் திரு.K.பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு அரசு மரியாதை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், நிகழ்விற்கு ஒத்துழைத்த அமைச்சர் பெருமக்களுக்கும். உரிய பாதுகாப்பு வழங்கி சிறப்பித்த தமிழக காவல்துறையினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

