ஷரிபுல் இஸ்லாம், சயீஃப் அலிகான் எக்ஸ் தளம்
சினிமா

சயீஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவம் | பொருந்திப் போகாத குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் கைரேகை!

நடிகர் சயீஃப் அலிகான் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள், குற்றம்சாட்டப்பட்ட ஷரிபுல் இஸ்லாமின் கைரேகைகளுடன் பொருந்தவில்லை என உயர்மட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Prakash J

பிரபல பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி தன் வீட்டிலேயே மர்ம நபர் ஒருவரால் குத்தப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கத்திக்குத்துக்குப் பின் மீட்கப்பட்ட சயீஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துவரும் அவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர்.

சயீஃப் அலிகான்

அந்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அலறல் சத்தம் கேட்டு எழுந்ததாகவும், அந்தச் சத்தம் தனது மகனின் அறையில் இருந்த வந்ததால் அங்கு சென்றதாகவும், அப்போது மகன் அழுதுகொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் தன்னை திடீரென தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்தச் சம்பவத்திற்குக் காரணமான வங்கதேச நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு ஜனவரி 29ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நடிகர் சயீஃப் அலிகான் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில், குற்றம்சாட்டப்பட்ட ஷரிபுல் இஸ்லாமின் கைரேகைகளுடன் எந்த கைரேகையுமே பொருந்தவில்லை என உயர்மட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சேகரிக்கப்பட்ட கைரேகை மாதிரிகளை மும்பை காவல் துறை, மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) அனுப்பியுள்ளது. ஆனால், அங்கு ஆய்வு செய்யப்பட்டதில் எந்த கைரேகையும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஷரிபுல் கைரேகையுடன் பொருந்தவில்லை எனத் தெரியவந்துள்ளது. இது, மும்பை போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கூடுதல் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.