சினிமா நடிகர் அரசியல் நோக்கி போகும் கலாட்டாக்களே `TN 2026'
குல்கந்த் குமார் (நட்ராஜ்) வட இந்தியாவிலிருந்து தமிழகத்துக்கு பிழைப்பு தேடி வருகிறார். எதேர்சையாக அவருக்கு கிடைக்கும் ஒரு சினிமா வாய்ப்பை தொடர்ந்து பெரிய ஹீரோவாக மாறுகிறார். சினிமா மீது பெரிய ஈர்ப்பு கொண்ட பெரும் பணக்காரரான மன்றாடியார் (தம்பி ராமையா), குல்கந்த் குமாரை ஸ்டார் ஹீரோவாக மாற்ற பல விஷயங்களை செய்கிறார். சாதாரண ஹீரோவாக இருந்த குல்கந்தை மெல்ல மெல்ல வளர்த்து அரசியல் பிரவேசத்துக்கும் தயார்படுத்துகிறார். அதற்கு இணங்கி தன் ரசிகர் மன்றத்தை, மக்கள் மன்றமாக குல்கந்த் மாற்ற, ஆரம்பிக்கிறது நெருக்கடிகள். விபத்து ஏற்படுத்தி கொள்ள பார்ப்பது, வருமான வரித்துறை சோதனை, கேஸ் போட்டு படத்தை முடக்குவது எனப் பல விஷயங்கள் நடக்க, அதில் ஈகோவாகும் குல்கந்த் தீவிர அரசியலுக்கு வர முடிவு எடுக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
இதனால் கொந்தளித்து குல்கந்த் குமாராம நட்ராஜ் புதிய கட்சி ஒன்றை தொடங்குகிறார், 2026-ல் முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்க, அது நடந்ததா இல்லை குல்கந்துக்கு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
நிஜ அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி அதனை காமெடி கலந்து கொடுக்க முயற்சித்துள்ளார் கதாசிரியர் தம்பிராமையா மற்றும் இயக்குநர் உமாபதி ராமையா.
லீட் ரோலில் வரும் நட்ராஜ் வழக்கம் போல தனது ஸ்டைல் நடிப்பை கொடுக்கிறார். ஆரம்பத்தில் வெகுளியான நபராக வருவது, பின்னர் சுற்றி உள்ளவர்கள் ஏற்றிவிடுவதற்கு ஏற்ப மாறுவது, ஈகோவை வெளிப்படுத்துவது என பல விஷயங்களை வெளிப்படுத்துகிறார். கிட்டத்தட்ட ஹீரோவுக்கு இணையாக அவர் கூடவே பயணிக்கும் பாத்திரத்தில் தம்பி ராமையா. வழக்கம் போல தனது ட்ரேட் மார்க் நடிப்பை கொடுத்திருக்கிறார். குல்கந்த் குமாரை ஒரு ஸ்டாராக மாற்றுவது, பின்னர் அவரை அரசியலுக்கு இழுப்பது என காமெடியன் + மாஸ்டர் மைண்ட் ரோலில் வருகிறார். சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்.
எம் எஸ் பாஸ்கருக்கு நீளமான ரோல் இல்லை, கூடவே கதையில் முக்கியத்துவமும் பெரிதாக இல்லை என்பதால் கவனத்தில் நிற்கவில்லை.
படத்திற்கு தன்னாலான அளவில் சுவாரஸ்யம் சேர்க்க முயல்கிறார் தர்புகா சிவா. பின்னணி இசை சிறப்பு, பாடல்கள் எதுவும் ஈர்க்கவில்லை. பிஜி முத்தையா ஒளிப்பதிவு பாடல்களில் கலர் கூட்டுகிறது.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் விஜயின் அரசியல் வருகையை கலாய்ப்பது போன்ற தோற்றத்தை கொடுத்திருக்கலாம். படத்தில் அதிக நேரம் நட்டி வரும் கெட்டப் விஜயின் சமீப கால கெட்டப்பை நிறைவுபடுத்தும் வகையில் இருக்கலாம். ஆனால் படத்தில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலரையும் கலாய்த்து தான் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அதில் சில ரெஃபரன்ஸ்கள் குபீர் ரகம். சினிமாவுக்குள் நடக்கும் சில விஷயங்களை கலாய்த்து வைக்கப்பட்ட காட்சிகளும் சுவாரஸ்யம் சேர்க்கின்றன. ஆனால் படத்தின் சிக்கல் என்ன என்றால் சீரியஸ் ஆக எடுக்க வேண்டிய அரசியல் பகடி படத்தை, விளையாட்டாக ஒரு ஸ்பூஃப் வீடியோ என்ற அளவிலேயே கொடுத்திருக்கிறார்கள். முதல் பாதியில் ஓரளவு நகரும் படம், இரண்டாம் பாதியில் தேங்கிவிடுகிறது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளை சுவாரஸ்யமாகவோ புதிதாகவோ எழுதி இருக்கலாம்.
ஒட்டு மொத்தமாக பார்க்கையில் ஆவரேஜ் அரசியல் பகடி படம், பொறுமை இருந்தால் பார்க்கலாம்!