எழுத்தாளரின் கொலை வழக்கை அவர் புத்தகத்தை வைத்தே கண்டுபிடிக்க முயலும் ஒரு காவலதிகாரியின் கதை!
எழுத்தாளர் ஜெபநேசன் (லோகு) நடு ரோட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். இவரின் வழக்கை விசாரிக்க துவங்குகிறார் காவலதிகாரி மகுடபதி (அர்ஜூன்). ஜெபநேசன் எழுதி வெளியிடாமல் வைத்திருக்கும் `காவேரி கறை' என்ற கதையில் இந்த வழக்கு பற்றிய க்ளூ இருப்பதாக உணரும் மகுடபதி, அந்தக் கோணத்தில் விசாரணையை துவங்குகிறார். ஆட்டிசம் பாதிப்படைந்த குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் நபர் மீரா (ஐஸ்வர்யா ராஜேஷ்). இவர் தன் வாழ்க்கை துணையாக ஆதியை (பிரவீன்ராஜா) தேர்வு செய்ய இருவரும் காதலில் பயணிக்கிறார்கள். ஒருகட்டத்தில் ஜெபநேசன் கொலை வழக்கு, மீராவின் காதல், மகுடபதியின் விசாரணை எல்லாம் ஒரே புள்ளியில் இணைய அதன் பின் என்ன நடக்கிறது? கொலையாளி யார்? எதற்காக கொலை நடந்தது? என்பதே மீதிக் கதை.
ஒரு க்ரைம் இன்வஸ்டிகேஷன் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன். பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை மையப்படுத்தி சொல்லி இருக்கும் கருத்துக்களும் கவனிக்க வேண்டியவை.
காவலதிகாரியாக அர்ஜூன், வழக்கம் போல் விறைப்பாக சுற்றுவது, வழக்கிற்கு தேவையான க்ளூவை கண்டுபிடித்ததும் ஆர்வமாவது என நடிப்பில் ஓகே. ஆனாலும் அவரது பாத்திரம் அத்தனை சுவாரஸ்யமாக எழுதப்படவில்லை என்பதால் பெரிய அளவில் ஈர்ப்பு எதுவும் இல்லை. ஆக்ஷன் கிங்குக்கு ஆக்ஷனிலும் பெரிய தீனி எதுவும் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் எமோஷனலாக காட்சிகளை சீரியஸாக கொடுக்க முயலுகிறார். இவர்கள் தவிர வேலா ராமமூர்த்தி, தங்கதுரை, ராம்குமார், அபிராமி, பிரவீன்ராஜா என அனைவரும் ஓக்கே ரகம்.
ஒரு பரபரப்பான த்ரில்லருக்கு தேவையான எதுவும் படத்தில் இல்லை என்பது தான் பெரிய மைனஸ். அது ஒளிப்பதிவு, இசை ஆரம்பித்து தொழில்நுட்ப விஷயங்களில் கூட இல்லை என்பது பெரிய ஏமாற்றம். இப்போதைய கால கட்டத்தில் ஒரு க்ரைம் த்ரில்லர், சுவாரஸ்யமான திருப்பங்கள் என ஒரு படத்தை கொடுப்பது மிகவும் சவாலான காரியம். இந்தப் படத்தில் வரும் திருப்பங்கள் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. அல்லது மிக சுலபமாக யூகிக்கும்படி இருக்கிறது.
அதையும் தாண்டி, பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பற்றி பேசும் ஒரு படத்தில் ப்ராங்ஸ்டார் ராகுலை வைத்து ஆண்டி காமெடிகள் வைப்பது, இப்படம் பேசும் கருத்துக்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அதிலும் பாலியல் சீண்டல் சார்ந்த காட்சிகளை எப்படி கையாள வேண்டும் என்பதில் இன்னும் பொறுப்புடன் செயல்பட்டிருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஓரளவு சுமாரான த்ரில்லராக மிஞ்சுகிறது இந்த `தீயவர் குலை நடுங்க'