Ryan Gosling Project Hail Mary
திரை விமர்சனம்

Science Fiction-னுக்குள் அன்பைப் போதிக்கும் படம்! | Project Hail Mary Review | Ryan Gosling

அறிவியல், சாகசங்கள் தாண்டி உணர்ச்சிபூர்வமான விஷயங்களை பேசும் படங்கள் குறைவே. அப்படியான விஷயத்தைப் பேசி இருக்கிறார்கள் இயக்குநர்களான Phil Lord - Christopher Miller.

Johnson

உலக அழிவை தடுக்க விண்வெளி செல்லும் நாயகனின் கதையே Project Hail Mary

சூரியனின் ஒளி மெல்லமெல்ல மங்க துவங்குகிறது. இதைக் கவனிக்கும் அரசாங்கம், அதிகாரி Eva Stratt (Sandra Hüller) தலைமையில் ஓர் அறிவியல் அறிஞர்கள் குழு ஒன்றுகூடி இதனை ஆராய ஆரம்பிக்க, ஓர் அதிர்ச்சி தகவல் தெரிய வருகிறது. சூரியன் உட்பட பல விண்வெளி நட்சத்திரங்களின் Electromagnetic Radiation-ஐ மெல்லமெல்ல தின்று வருகிறது Astrophage என்ற உயிரினம்.

Project Hail Mary

இப்படியே விட்டால் 30 வருடங்களில் சூரியனை எல்லாம் இந்த உயிரினம் அழித்துவிடும், பூமியே கடும் குளிர்பிரதேசமாக மாறிவிடும், உயிரினம் அத்தனையும் அழிந்துவிடும். எல்லா நட்சத்திரங்களும் அழிந்து வந்தாலும் Tau Ceti என்ற நட்சத்திரம் மட்டும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே, அந்த நட்சத்திரத்தை ஆராய்ந்து மற்ற நட்சத்திரங்களையும் காப்பாற்றும் சூத்திரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் Project Hail Mary. இந்தக் குழுவில் முன்னாள் Molecular Biologistம், இந்நாள் பள்ளி ஆசிரியருமான Ryland Grace (Ryan Gosling) வேண்டாவெறுப்பாக இணைக்கப்படுகிறார். எதிர்பாராத ஒரு சூழலால் Grace விண்வெளிக்குச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

ஹாலிவுட்டில் விண்வெளி சம்பந்தப்பட்ட சைன்ஸ் ஃபிக்ஷன் படங்கள் நிறையவே வந்திருக்கிறது. அதில் அறிவியல், சாகசங்கள் தாண்டி உணர்ச்சிபூர்வமான விஷயங்களைப் பேசும் படங்கள் குறைவே. அப்படியான விஷயத்தைப் பேசி இருக்கிறார்கள் இயக்குநர்களான Phil Lord - Christopher Miller.

Project Hail Mary

ஒன் மேன் ஆர்மி என்பதுபோல, கிட்டத்தட்ட இந்தப் படம் முழுக்க நாம் அதிக நேரம் பார்ப்பது Ryan Gosling ஒருவரைத்தான். சிங்கிள் ஆக்டர் படம்போலதான் முக்கால்வாசி படம் இருக்கிறது. அதனைப் புரிந்துகொண்டு அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிக்கு விருப்பமில்லாமல் வருவது, விண்வெளிக்குச் செல்லவும் பயந்து நடுங்குவது, விண்வெளியில் அவர் ராக்கியைச் சந்தித்தபின் அவருக்கு ஏற்படும் புரிதல்கள் என பல உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.

அதிகாரியான Eva Stratt பாத்திரத்தில் Sandra Hüller. படம் முழுக்க கையறுநிலையைப் பிரதிபலிக்க வேண்டிய பாத்திரம். இன்னும் சொல்லப்போனால், இந்த உலகமே அழியும் அபாயத்தில் இருக்கிறது என்ற உணர்வை ஒற்றை ஆளாகப் பார்வையாளர்களுக்கு கடத்தும் பொறுப்பு இவருக்குத்தான். அதை அனாயசமாகச் செய்கிறார்.

Project Hail Mary

இதற்கடுத்து நம்மைக் கவர்வது ராக்கி. உருவற்ற ஓர் உருவாய் வரும் கற்பனை பாத்திரம், நம்மை உணர்வுரீதியாகக் கவர்கிறது. Grace உடன் மெல்லமெல்ல ஒரு பிணைப்பை உண்டாக்குவது, மனிதர்களை புரிந்துகொள்ள முடியாமல் அது கேட்கும் கேள்விகள் எனச் சிறப்பான பாத்திரமாக வருகிறது.

Andy Weir எழுதிய நாவலை சுவாரஸ்யமான திரைக்கதையாகி இருக்கிறார் Drew Goddard. Grace பாத்திரம் திடீரென விண்வெளியில் கோமாவிலிருந்து சுயநினைவுக்கு வருகிறது. மெல்லமெல்ல தான் யார் என்ற சுயத்தை உணர்கிறது. அதன் வழியே முன்பு என்ன நடந்தது என்பதை பார்வையாளர்களுக்குச் சொல்லும் உத்தி சுவாரஸ்யம் சேர்க்கிறது. விண்வெளி சார்ந்த கதைக்களம் என்பதால் விஷுவலாக ஒரு பிரம்மாண்டத்தைக் கண்முன் நிறுத்தி இருக்கிறது குழு.

Project Hail Mary

விண்வெளியின் ஜாலங்களை வடிவமைத்திருப்பது, அங்கு நடக்கும் எதிர்பாரா விபத்துகளைப் பதற்றத்துடன் காட்டுவது என தொழில்நுட்பக்குழுவின் உழைப்பு அபாரம். குறிப்பாக ஒரு ஐமாக்ஸ் அனுபவத்திற்குச் சிறப்பான விஷுவல் ட்ரீட்டை தருகிறது படம்.

உலகத்தை ஆபத்திலிருந்து காப்பது என்ற அட்வென்ச்சர், விண்வெளி என்ற சைன்ஸ் இவை எல்லாம் படத்தில் ஓர் அங்கம் என்றாலும், படத்தின் மையம் அன்பைப் பற்றி பேசுகிறது. இன்னும் சொல்லப்போனால், இப்படத்தின் முக்கியமான பாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் அன்பின் அடிப்படையில் எடுக்கப்படுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். விண்வெளி வீரர் ஒருவரிடம் Grace, "என்னுடைய ஜீனில் உங்கள் அளவுக்கு தைரியம் இல்லை" எனச் சொல்லும்போது, "தைரியம் என்பது ஜீனில் வருவது கிடையாது, அது நீ யாருக்காக தைரியமாக நினைக்கிறாயோ, அதிலிருந்து வரும்" என்பார். உண்மையில் இந்தப் படம் சொல்ல வருவதும் அதுதான்.

Project Hail Mary

இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால், படம் துவங்கி 45 நிமிடங்கள் வரை கதை நகராமல் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். அது பெரிய அளவில் சோர்வை ஏற்படுத்தும். அதுவரை என்ன நடக்கிறது என்றே புரியாமல் சற்று விழி பிதுங்குகிறது. மேலும் இந்தக் கதையை இன்னும் சுருக்கமாக சொல்லி இருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது.

இப்படியான சின்ன குறைகளை கடந்துவிட்டால், ஓர் அற்புதமான சினிமா அனுபவத்தையும், உணர்வுப்பூர்வமான விஷயங்களையும் உங்களுக்குக் கொடுக்கும் சினிமாவாக இருக்கும் இந்த Project Hail Mary. நிச்சயம் பெரிய திரையில் தவறவிடக்கூடாத படம்.