காதலிக்காக அடிதடியில் இருந்து ஒதுங்க நினைக்கும் பாரியின் வாழ்வில் நடந்தது, நடப்பது, நடக்கப் போதாவதே `ரெட்ரோ'.
தூத்துக்குடியில் அடிதடி, கடத்தல் என பெரிய கேங் வைத்திருப்பவர் திலகன் (ஜோஜூ ஜார்ஜ்). அவரின் வளர்ப்பு மகன் பாரிவேல் கண்ணன் (சூர்யா). விரைவில் தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) மணக்க இருப்பதால், ரௌடியிசத்தில் இருந்து வாலன்டியர் ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டு திருமணத்துக்கு ரெடியாகிறார். பாரியின் கடைசி அசைன்மென்ட்டாக கொடுக்கப்பட்ட கோல்டு ஃபிஷ் டெலிவரி ஆகாததால் பாரி - திலகன் இடையே வெடிக்கிறது மோதல். ருக்மணி உடனான திருமணம் நிற்கிறது, அங்கு ஏற்பட்ட அடிதடி காரணமாக பாரி ஜெயிலுக்கு செல்கிறார். காதலி ருக்மணி இருக்கும் இடத்தை தேடி கொண்டிருக்கும் பாரி, இடம் தெரிந்த பின் சிறையில் இருந்து தப்புகிறார். கோல்ட் ஃபிஷ் விவகாரத்தில் அரசு அதிகாரம் மிக்க நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் பாரியை தேடுகிறார் திலகன். ருக்மணி - பாரி காதல் என்ன ஆகிறது? கோல்ட் ஃபிஷ் விவகாரம் என்ன? பாரியின் வாழ்க்கைக்கான பர்ப்பஸ் என்ன? என்பதெல்லாம் சொல்வது தான் ரெட்ரோ படத்தின் மீதிக்கதை.
கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய உலகத்தை கட்டமைப்பதில் வழக்கம் போல் வென்றிருக்கிறார். கேங்க்ஸ்டர் கதை, அதற்குள் காதல், புராண கதையின் நிகழ்கால சித்தரிப்பு என பலவற்றை கதைக்குள் இணைத்த விதம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. பாரிவேல் கண்ணனாக சூர்யா அசத்துகிறார். முதல் பாதி வரை சிரிப்பே இல்லாமல் நடிப்பது, இறுக்கமான முகத்துடன் காதல் காட்சிகளில் நடிப்பது என வித்தியாசமான பர்ஃபாமன்ஸ். மிக இயல்பான நடிப்பில் கவர்கிறார் பூஜா ஹெக்டே. சூர்யாவுடனான காதல் காட்சிகள், ஆட்டம், சூர்யாவை ஏற்க முடியாமல் தவிப்பது, சூர்யா பற்றிய உண்மை தெரிந்த பின் பிரிவது என பல உணர்வுகளை காட்டும் வேடம், அதை முழுமையாக செய்திருக்கிறார். சொந்த குரல் டப்பிங்கில் மட்டும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஜோஜூ ஜார்ஜ்க்கு வில்லன் வேடம் முடிந்த வரை அதை சிறப்பாக செய்கிறார். அந்த வினோத புருவம் மட்டும் ஏன் எனப் புரியவில்லை. ஜெயராம், விது, தமிழ், ஸ்வாசிகா, கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் என எக்கச்செக்க நடிகர்கள் கொடுத்த வேலையை தரமாக செய்கிறார்கள்.
போருக்கு எதிரான நிலைப்பாட்டை சொல்வது, சர்வாதிகாரத்தில் சிக்கி இருக்கும் மக்கள் என நிஜ நிகழ்வுகளை பிரதிபலித்து, அதே சமயம் கண்ணன் - கம்சன் கதையை புத்தரின் தம்மத்தோடு இணைத்தது, மக்களின் மீட்பராக வரும் நாயகன் என பல அடுக்குகளில் கதையை சொல்லியிருக்கிறார். தொழிநுட்ப ரீதியாக படத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் சூர்யா - பூஜாவின் திருமண காட்சிகளை சிங்கிள் டேக்காக 15 நிமிடத்திற்கு எடுத்திருந்ததை சொல்லலாம். அது படமாக்கப்பட்ட விதம், சண்டை + நடனத்தை வடிவமைப்பு, நடிப்பு என அத்தனையும் மிரட்டல்.படத்தின் நாயகன் சந்தோஷ் நாராயணன் என சொல்லும் அளவுக்கு பின்னணி இசை மற்றும் பாடல்கள் அத்தனை சிறப்பு. கனிமாவில் ஆட வைப்பவர் கண்ணாடி பூவில் கலங்க வைத்து, தி ஒன் பாடலில் அதிர வைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு க்ளாஸிக் கோணங்கள் மூலம் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
படத்தின் குறைகள் எனப் பார்த்தால், முன்பு சொன்னது போல பல அடுக்குகளில் கதையை சொல்லியிருக்கிறார்கள். அவை இன்னும் கொஞ்சம் இயல்பாக திரைக்கதைக்குள் வந்திருக்கலாம். முதல் பாதியில் காதல், சிரிப்பு, போர் என சிறப்பாக நகரும் கதை, இரண்டாம் பாதியில் இன்னும் பல சேப்டர்களாக விரிகிறது. ஆனால் ஓரளவுக்கு மேல் அவை அலுப்பையே தருகிறது. படத்தில் சொன்ன அத்தனையும் மைய கதைக்கு தேவையே என்றாலும் அவற்றை இன்னும் சுருக்கமாக சொல்லி முடித்திருக்கலாம். ஜடாமுனி பற்றி திடீர் என வரும் பிளாஷ்பேக் எதிர்பாராதது என்றாலும், சற்று திணிப்பு போலவே தோன்றியது.
மொத்தத்தில் சொல்வதென்றால், கார்த்திக் சுப்புராஜ் தன் வழக்கமான பாணியில், வித்தியாசமான படம் ஒன்றை தந்திருக்கிறார். அதில் சில சுவாரஸ்யமாகவும், சில அத்தனை ஏற்புடையதாக இல்லை என்றும் நகர்கிறது. படத்தில் இன்னும் கொஞ்சம் பரபரப்பையும், நம்பகத்தன்மையும் சேர்த்திருந்தால் ரெட்ரோ ஒரு க்ளாஸிக் படமாக அமைந்திருக்கும். ஆனாலும் ஒரு நல்ல சினிமா அனுபவம் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.