காதலித்த பெண்ணுக்காக பல ரிஸ்க்குகளை எடுக்கும் ட்யூட்-ன் கதை.
அகன் (பிரதீப் ரங்கநாதன்), அவரது மாமா மகள் குரலரசி (மமிதா பைஜூ) மற்றும் நண்பர்களுடன் இணைந்து சர்ப்ரைஸ் ஈவென்ட் ப்ளானார் நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறார். குரலரசி புரபோஸ் செய்ய முதலில் மறுக்கும் அகன், பின்பு தனக்கும் குரல் மேல் இருக்கும் காதலை உணர்கிறார். அகனின் அம்மா பார்வதி (ரோகிணி), குரல் அப்பா அதியமான் (சரத்குமார்) இருவருக்கும் இடையில் பிரச்னை ஒன்றால் பேச்சுவார்த்தை இல்லை என்றாலும், தங்கள் பிள்ளைகளில் விருப்பத்தை நிறைவேற்ற இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதிக்கிறார். திருமணத்திற்கு ஒருநாள் முன்பு, குரலரசி சொல்லும் ஒரு விஷயம், அகனின் வாழ்க்கையை திருப்பிப் போடுகிறது. அதனபின் என்ன நடக்கிறது? பார்வதி - அதியமான் இடையே என்ன பிரச்னை? வரக்கூடிய சிக்கல்களை அகன் எப்படிச் சமாளிக்கிறார் என்பதெல்லாம்தான் ட்யூட் படத்தின் மீதிக்கதை.
மார்டன் இளைஞர்களுக்கு ஏற்றபடி காதல் பற்றி தெளிவான ஒரு படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். அதற்குள்ளே பெண்கள் நடத்தப்படும் விதம், சாதி வெறியால் நடக்கும் விபரீதங்கள் போன்றவற்றையும் எளிமையாக, அதேசமயம் அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
படத்தின் முதல் பலமே பிரதீப் - மமிதா ஜோடதான். பிரதீப் தனக்கே உரிய பாணியிலான நடிப்பில் கலக்குகிறார். குறிப்பாக நெருக்கடியான சூழலில், அவர் காட்டும் அத்தனை ரியாக்ஷன்களுக்கும் தியேட்டரில் க்ளாப்ஸ் பறக்கிறது. தன் காதல் பற்றிய எமோஷனல் தருணங்களில் எல்லாம் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருக்கு இன்னும் ஒருபடி மேலே போய் கவர்கிறார் மமிதா. பிரதீப்பை அசால்ட்டாக டீல் செய்வது, குழம்புவது, உண்மை தெரிந்ததும் தவிப்பது என பல உணர்ச்சிகளை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
நல்லவரா, கெட்டவரா என குழப்பும்படியான ஒரு க்ரே பாத்திரத்தில் சரத்குமார். சமீபமாக சீரியஸ் பாத்திரங்களில் மட்டுமே பார்த்து பழகிய சரத், இம்முறை ஒரு குழந்தைபோல துறுதுறுவென இருப்பது, காமெடி செய்வது, மிரட்டுவது என சிறப்பான நடிப்பு. இரண்டாவது ஹீரோவாக வரும் ஹருது ஹாரோன், படத்தின் காமெடிக்கு கூடுதலாக உதவுகிறார். சின்ன வேடம் என்றாலும் ரோகிணி, டிராவிட் மனதில் நிற்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் தெலுங்கு நடிகர் சத்யா வரும் காட்சிகளும் ஃபுல் ஃபன்.
மமிதாவை ஒரு சிக்கலில் இருந்து காப்பாற்ற பிரதீப் சம்மதிக்கும் காரணம், மிக வலுவாக எழுதப்பட்டிருந்ததுதான், இப்படத்தை ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக மாற்றுகிறது. பிடிக்கலைன்றதுதான் ரீஷன், வேற என்ன ரீஷன் என ஆரம்பத்தில் ஒரு காதலைப் பிரிவதும், வாழ்க்கைல சில விஷயங்கள லெஃப்ல டீல் பண்ணா, வாழ்க்கை நம்மள லெஃப்ல டீல் பண்ணும் என உணரும் இடம், இடைவேளைக்கு முன் சரத்குமார், மமிதா, பிரதீப் வைத்து வரும் காட்சி எனப் பல இடங்கள் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருந்தது.
சாய் அப்யங்கர் இசையில் ஊரும் ப்ளட் ஏற்கெனவே பெரிய ஹிட். படத்திலும் அது அட்டகாசமாக வந்திருக்கிறது. எல்லாப் பாடல்களுமே ரசிக்குமபடி கொடுத்திருக்கிறார். ஆனால் பின்னணி இசையில் ஊரும் ப்ளட், ஓவராகவே ஊறி இருக்கிறது. அந்த ரிப்பீட் மோடை தவிர்த்திருக்கலாம். நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்தை மிக ஸ்டைலாகவும், கலர் ஃபுல்லாகவும் கொடுத்திருக்கிறது.
மமிதா பைஜூவின் இன்ஸ்டன்ட் காதலில் அத்தனை அழுத்தம் இல்லாததால், அவரை சீரியஸாக எடுத்துக் கொள்வதா, காமெடியாக எடுத்துக் கொள்வதா என்பதில் குழப்பங்கள் இருக்கிறது. மேலும் பிரதீப் காதலை மறுப்பதற்குச் சொல்லும் காரணமும், பின்பு காதலை உணர்ந்ததற்குச் சொல்லும் காரணமும்கூட மிக மேம்போக்காகவே இருந்தது. அந்த ஏரியாக்களை இன்னும் வலுப்படுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ஒரு ஜாலியான, அதேசமயம் கொஞ்சமாக கருத்தும் கொடுக்கும் படமாக இருக்கிறது இந்த ட்யூட்.