"ப்ரதீப் ரங்கநாதன், ஒரு மினி பாக்யராஜ்!"- இயக்குநர் அமீர் சிறப்பு நேர்காணல்!

"ப்ரதீப் ரங்கநாதன், ஒரு மினி பாக்யராஜ்!"- இயக்குநர் அமீர் சிறப்பு நேர்காணல்!
"ப்ரதீப் ரங்கநாதன், ஒரு மினி பாக்யராஜ்!"- இயக்குநர் அமீர் சிறப்பு நேர்காணல்!

தன் மௌனம் பேசியதே படத்தின் கௌதம் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் மொரட்டு சிங்கிள்களை அறிமுகப்படுத்தியவர் என்றே இயக்குநர் அமீரை சொல்லலாம். அடுத்த படமான ராமில், இன்னொரு மைல்கல். தாய் மகன் உறவை, இதுவரை பார்த்திராத கோணத்தில் த்ரில்லிங்காகவும் நெகிழ்ச்சியாகவும் காட்சிப்படுத்தியிருந்தார். அதற்குப்பின் பருத்திவீரன் மூலம் தமிழ் சினிமாவில், கிராமிய கதைகளுக்கான தளத்தையே மாற்றி அமைத்தார்.

பருத்திவீரனுக்கு முன்பு வரை பாரதிராஜாவின் கிராமங்களையே உதாரணமாக எடுத்து படம் எடுத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, பருத்திவீரன் கிராமங்கள் பற்றிய மற்றொரு கோணத்தை காட்டினான். இதற்கு பின்னும் இன்று வரை பல படங்களில் இயக்குநராகவும், தேர்ந்த நடிகராகவும் தன்னை நிலைநாட்டிக்கொண்டிருப்பவர் அமீர்.

சினிமாவை தாண்டி, அரசியலிலும் கொள்கைகளோடு இருப்பவர் அமீர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அன்பிற்கினிய நண்பர் என்றபோதிலும் நா.த.க-வில் கட்சியில் அவர் இல்லை. நண்பரேயானாலும், நாம் தமிழருக்கும் அமீருக்கு சில முரண்கள் உள்ளன. அவை குறித்தும், அரசியலில் தன் நிலைபாடு என்ன, இயக்குநராகவும் நடிகராகவும் தன் திரை வாழ்க்கை எப்படி இருந்தது, இனி எப்படி இருக்கப்போகிறது, திரையை கடந்த தனது தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பவை பற்றியெல்லாம் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் அமீர். அந்த உரையாடலின் முக்கியமான சிறு தொகுப்பு இங்கே, உங்களுக்காக...

நாம் தமிழர் கட்சிக்குள் பாஜக நுழைந்து விட்டதாக நினைக்கிறீர்களா?

நாம் தமிழரில் மட்டுமல்ல... பாஜக தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிக்குள்ளும் நுழைந்து விட்டதாகத்தான் தோன்றுகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பிரச்னை வந்தபொழுது இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவில்லை. இப்போதைய அரசு GoBack Modi என சொல்லவேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனால் Welcome Modi என்று சொல்ல என்ன அவசியம்? தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜெயலலிதா தான் `மோடியா / லேடியா?’ என்று கேட்டார். ஆனால் அப்படி பேசி அவர் ஜெயித்த பின், அதே கட்சியில் அதே ஆட்சிக்காலத்தில் அவர் மறைவிற்கு பின் அங்கு அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, `மோடி எங்கள் டாடி’ என அப்படியே தலைகீழாக சொன்னார்... இதுதான் இங்கு நிலை. அந்தவகையில், தமிழ்நாட்டில் அனைத்து கட்சியிலும் பிஜேபி நுழைந்து விட்டார்கள் என்பது உண்மையென்றே நினைக்கிறேன்.

இன்றைய இளம் இயக்குநர்களுக்கு நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயம் என்ன?

நான் சேது படத்தில் துணை இயக்குனராக, என் நண்பர் பாலாவின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானேன். பிறகு நந்தாவிலும் அவருடன் வேலை செய்தேன். பிறகு இயக்குனராக மாறினேன். மெளனம் பேசியதே, ராம் படங்களில் சசிகுமார் என்னுடன் துணை இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு பருத்தி வீரன், ஆதி பகவன் என பயணித்தேன். இடையே பிற இயக்குநர்கள் படங்களில் நடிக்கவும் செய்தேன். என்னுடைய திரைவாழ்வின் மூலம் இன்றைய இளம் துணை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் நான் சொல்லவருவது என்ன என்றால், டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில் இருக்கிறது என்று பார்க்காதீர்கள். ஏனெனில் இயக்குனராவது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு நிரைய அடிமட்ட வேலை செய்யவேண்டும். ஒவ்வொரு சினிமாகாரனும் பத்து அரசியல் வாதிக்கு சமம். ஆகவே உழைத்துக்கொண்டே இருங்கள்

இந்துத்வா அல்லது வலதுசாரி சித்தாந்தத்தை ஆதரிக்கும் திரைப்படத்திற்க்கு பின்னால், பாஜக இருப்பதாக சொல்லப்படும் தகவலை எப்படி பார்க்கின்றீர்கள்?

அது தகவல் இல்லை. உண்மைதான். நிச்சயமாக திரைத்துறையில் அவர்கள் தடம் பதிக்க ஆரம்பித்து விட்டனர். காஷ்மீர் ஃபைல் படம் வெளிவந்த விதம், அதன் எதிர்மறை விமர்சனங்களுக்கு எழுந்த அதிர்வலைகள் போன்றவையில்லிருந்தே அதை தெரிந்துக்கொள்ளலாம். இந்துத்துவா சக்தியை பொருத்த வரையில் தேசம் முழுவதும் அவர்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதுதான் உண்மை.

இயக்குனரொருவர் நடிகராவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

நடிகனாக இருக்கும் சமயத்தில் இயக்குனர்கள் செய்யும் தவறுகளை பார்க்கும்பொழுது வருத்தமளிக்கும். அதையும்தாண்டி இயக்குநரொருவர் நடிகராகிறார் என்றால், அதற்கு நடிகர்கள் கொடுக்கும் சில பிரச்னைகளே ஆகும். மணிவண்ணன், பார்த்திபன், சசிகுமார் இவர்கள் எல்லாம் இயக்குனர் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு முழுநேர நடிகராக மாறியதற்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

இயக்குனர் மணிவண்ணன் இழப்பு உங்களுக்கு எந்தளவுக்கு பேரிழப்பு?

நிச்சயம் அது எனக்கு பெரிய இழப்புதான். தன்னைவிட வயதில், அனுபவத்தில் சின்னவரை கூட `சார்’ என்று தான் அழைப்பார் மணிவண்ணன் அவர்கள். அந்தளவுக்கு பண்பாளர். மட்டுமன்றி மிகப்பெரிய சிந்தனையாளர், தன் திரைப்படத்தில் அரசியல் பேசக்கூடியவர், பொதுவெளியில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக நின்றவர். எப்போதுமே, போகிறப்போக்கில் வசனம் எழுதக்கூடியவர். நிறைய வெற்றிப்படங்களை தந்தவர். ஒரு நடிகனாக சாதித்தவர் அவர்!

துணை இயக்குனராக நீங்கள் இருந்தபோது, இயக்குனருக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறீர்களா? உங்கள் துணை இயக்குனர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வீர்களா?

நிச்சயமாக இரண்டுமே நடந்துள்ளது. சேது படத்தில் கடைசி காட்சியமைப்பில் பாலாவுக்கு நிறைய விஷயங்கள் நான் உடனிருந்து சொல்லியிருக்கிறேன். எனக்கான சந்தர்ப்பம் அங்கு எனக்கு கிடைத்தது. என் படங்களிலும் இப்படித்தான். துணை இயக்குனர் சொல்லும் விஷயம் சரியாக இருந்தால் ஏற்பேன்.

சமீபத்தில் வந்த இளம் இயக்குனரைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? அதில் அவர்கள் எடுத்த படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் என்ன?

நிறைய புது இயக்குநர்கள் வருகின்றனர். சமீபத்தில் வந்ததில் எனக்கு பிடித்த படம் லவ்டுடே. அதன் இயக்குனர் ப்ரதீப், ஒரு மினி பாக்கியராஜ் என்றே சொல்வேன். லோகேஷ் கனகராஜ் கூட அருமையாக படம் எடுக்கிறார். விக்ரம் படத்தில் சூரியாவின் குணத்தை கடைசி பத்து நிமிடத்தில் அவர் காட்டிய விதம் அருமையாக இருந்தது. ஒரு படம் என்ன சொல்ல வருகிறது என்பதும், அதை விமர்சிப்பதும் வேறு விஷயம். நான் இந்த இயக்குநர்களின் படங்களுடைய கருத்துகளை பிடிக்குமென்றோ இல்லையென்றோ சொல்ல விரும்பவில்லை. நான் சொல்வதெல்லாம், அவர்களின் படங்கள் அமைக்கப்பட்ட விதத்தைதான்! ஒரு இயக்குநராக தேர்ந்துளார்கள் இவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com