தாத்தாவைத் தேடிச் சென்று பேயிடம் சிக்கும் ஹீரோவின் கதையே, `The Raja Saab'.
ராஜூ என்ற ராஜாசாப் (பிரபாஸ்) தன் பாட்டி கங்கா தேவி (ஸரீனா வஹாப்) உடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு திருடன் ஒருவனை விரட்டிப் பிடிக்க சென்ற தன் கணவர் கனகராஜை (சஞ்சய் தத்), நினைத்துக் கொண்டே வாழ்கிறார் கங்கா தேவி. திடீரென அவரின் கனவில் கணவர் வந்து தன்னைக் காப்பாற்றும்படி கேட்கிறார். அதே நேரத்தில், அவர் ஹைதராபாத்தில் இருக்கிறார் என்ற தகவலும் வர, தாத்தாவை தேடிக் கொண்டுவர ராஜூவை அனுப்பி வைக்கிறார் பாட்டி கங்கா. பேரனின் தேடுதல் வேட்டை என்ன ஆகிறது?, இந்தக் கதைக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம்தான் ராஜாசாப்.
இயக்குநர் மாருதி என்ன மாதிரியான கதையாக இருந்தாலும் அதற்குள் காமெடியை கொண்டுவருவதில் வல்லவர். அப்படி இந்தப் படத்திலும் பல இடங்களில் காமெடியை கொண்டு வந்திருக்கிறார். சில இடங்களில் அவை வேலையும் செய்கிறது. `பாகுபலி', `சாஹோ', `ஆதிபுருஷ்', `சலார்', `கல்கி' என பிரம்மாண்ட படங்களாக கொடுத்துவந்த பிரபாஸை ஒரு லைட் ஹார்ட் காமெடி படத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் மாருதி. படமும் அதற்கு ஏற்ப செம கலர் ஃபுல்லாக இருக்கிறது. பிரபாஸும் அதற்கு சமன் செய்யும்படி சில காமெடிகளை முயன்றிருக்கிறார்.
ஆனால் இதை தவிர படத்தில் பாசிட்டிவ் எனச் சொல்ல எதுவுமே இல்லை. முதலில் இந்தக் கதையே என்ன என்று புரியாத அளவுக்கு என்னென்னவோ வருகின்றன. ஒரு ஜாலியான படம் என துவங்குகிறது, ஹீரோவின் பாட்டிக்கு அல்சைமர் அதனால் அவரை கவனமாக பார்த்துக் கொள்ளும் ஹீரோ என கதை நகர்கிறது, திடீரென தொலைந்துபோன தாத்தா என்கிறார்கள், கன்னியாஸ்திரி ஆகப்போகும் பெண்ணை பார்த்து ஹீரோவுக்கு காதல் என்கிறார்கள், பிறகு மாளவிகா மோகனனை பார்த்து லவ் என்கிறார்கள், பிறகு மிக மோசமான ஒரு ஃபிளாஷ்பேக், அதைவிட மோசமான க்ளைமாக்ஸ் எனச் செல்கிறது படம். இப்படி படம் எடுக்கும் ஒவ்வொரு திருப்பமும் முந்தை காட்சியைவிட மோசமாக ஒன்று என நகர்கிறதே தவிர, ஒரு இடத்தில்கூட சுவாரஸ்யம் இல்லை.
முதன்மைப் பாத்திரம் பிரபாஸ்தான். அவர் படம் முழுக்க வந்தாலும் மோசமாக எழுதப்பட்ட ஒரு பாத்திரமாக இருக்கிறது. அவருக்கே அப்படி என்றால்ம் ஹீரோயின்கள் நிலையை யோசித்து பாருங்கள். ரிதி, நிதி, மாளவிகா என கிளாமர் காட்ட மட்டும் மூன்று ஹீரோயின்களை அழைத்து வந்திருக்கிறார்கள் . ஆளுக்கு ஒரு பாடல், மூவரும் சேர்ந்து ஒரு பாடல் என கண்ட கண்ட இடத்தில் பாடல் வருகிறது. தமனின் இசையில் பாடல்கள் எல்லாம் ஆவரேஜ் ரகம். பின்னணி இசையில் காதுகளையும் பதம் பார்க்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு தரமாக இருந்தாலும், கண்களை கூசச்செய்யும் கலர்கள், செட்கள், கிராஃபிக்ஸ் என கண்களே சோர்வாகும் அளவுக்கு இருக்கிறது படம். இந்தப் படத்தில் கோர்வை எதுவும் இல்லை என முடிவு செய்துவிட்ட பிறகும், 3 மணிநேர நீளம் எதற்காக எனத் தெரியவில்லை. அப்படியே ஒன்றரை மணிநேரத்தை தூக்கி எறிந்தால்கூட இப்படியேதான் படம் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், படம் விரைவாக முடிவும் என்ற ஒரு பாசிட்டிவ் பாயிண்ட் சேரும்.
இந்தப் படத்தில் பலரும் ஹைப் கொடுத்தது 40 நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகளைப் பற்றித்தான். ஆனால், அவைதான் படத்திலேயே நம் பொறுமையைச் சோதிக்கும் 40 நிமிடங்கள். ஒரு அழுத்தமான விஷயமும் இல்லாமல் மிக மேம்போக்காக ஒரு சண்டை வடிவமைப்பு, ஒரு ஹீரோவை அழகானவராக காட்ட வேண்டும், அவரை பார்த்து பல பெண்கள் மயங்குவார்கள் என காட்சி வைக்க வேண்டும் என்பதெல்லாம் ஓரளவுக்கு ஓகேதான். ஆனால் இதில் எல்லை மீறி, மூன்று நாயகிகளை கையாண்டிருந்த விதம் மிக மலினமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கண்டிக்கதக்கதுகூட.
உண்மையில் இந்தப் படம், என்ன சொல்ல வருகிறது, இதுதான் மக்கள் ரசிப்பார்கள் என இயக்குநர் நினைக்கிறாரா? பெண்களை இவ்வளவு மோசமாக சித்தரிப்பதுதான் உங்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்கு படமா? எப்போதும் ஒரு படம் பற்றி விவரிக்கும்போது சில குறைகள் இருந்தாலும் படம் பார்க்கலாம் எனச் சொல்லும் வழக்கம் உண்டு. ஆனால் இந்தப் படத்தை எந்த கோணத்தில் இருந்தும் ரசிக்க முடியாத, நம் பொறுமையை, ரசனையை கொச்சைப்படுத்துகிற ஒரு படமாக இருக்கிறது இந்த ராஜாசாப். இதில் இன்னும் உச்சம் என்ன என்றால், படத்தின் இறுதியில் `Raja Saab Circus 1935' என அடுத்த பாகத்துக்கு லீட் வைத்ததுதான். படக்குழுவின் இந்த தன்னம்பிக்கையைப் பாராட்டலாம்.