குடும்பத்துக்காக கைவிட்ட வன்முறையை, மீண்டும் அதே குடும்பத்திற்காக கையிலெடுக்கும் கேங்ஸ்டர்!
90களின் பாம்பேயில் சத்யநாராயணன் (பிரகாஷ் ராஜ்) கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகத்தின் வழியாக ஆயுதத்தை கடத்தி வருகிறார் ஜிம்மி (சுதேவ் நாயர்). போதை, ஆயுதம் கூடாது என கோடு போட்டு வாழும் சத்யாவின் கேங்ஸ்டர் டீம் இதனை எதிர்க்க, சத்யாவின் மகன் உட்பட எல்லோரையும் சுட்டு போடுகிறார் ஜிம்மி. இந்த விஷயம் சத்யாவுக்கு தெரிந்த பின் பெரிய ஆபத்து வருவதை உணர்ந்து, தன் வளர்ப்பு மகன் OG என்ற ஓஜஸ் கம்பீராவை (பவன் கல்யாண்) அழைத்து வர நாசிக் செல்கிறார். யார் இந்த OG? ஏன் அவர் பாம்பேவை விட்டு சென்றார்? அவர் எதிர்க்க வேண்டிய எதிரிகள் யார்? திரும்ப வருபவர் செய்வது என்ன? என்பதெல்லாம் தான் இந்த `They Call Him OG'.
பழக்கப்பட்ட பாட்ஷா கதை, அடித்து துவைத்த அதே ஃபார்முலா. ஆனால் இதில் பவர்ஸ்டார் என்ற புது மசாலாவை கலந்து பரிமாறியிருக்கிறார் இயக்குநர் சுஜீத். படத்தின் பெரிய பலம் ஒரு மாஸ் ஹீரோவுக்கான எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கும் சுஜீத்தின் மேக்கிங் தான். லாஜிக் எல்லாம் யோசிக்க விடாத அளவு, மாஸ் டெம்போ எங்கும் குறையாமல் கதையை நகர்த்துகிறார்.
பவன் கல்யாண் எப்போதும் போல் மாஸ் + ஆக்ஷன் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். துப்பாக்கி, வாள் என சண்டை இதில் நடந்தாலும் அவருடைய ஸ்டைல் மூலம் இன்னும் மெருகேற்றுகிறார். முக்கியமான ஒரு இழப்பை கண்டு கலங்குவது, போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் விசாரணையில் ஆக்ரோஷமாவது என பல காட்சிகளில் ஒற்றை ஆளாக படத்தை தாங்குகிறார் பவன். ஸ்டைலிஷ் வில்லனாக ஓமி கதாப்பாத்திரத்தில் இம்ரான் ஹாஸ்மி. நடிப்புக்கு பெரிதாக வாய்ப்பில்லை, டெம்பிளேட் வில்லனாக வந்து போகிறார். பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி இருவருக்கும் ஹீரோவுக்கு பில்டப் கொடுக்கும் ரோல். ஆனாலும் அவர்கள் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் கவனிக்க வைக்கிறது. படத்தின் நரேட்டர் + முக்கிய பாத்திரத்தில் அர்ஜூன் தாஸ். வில்லனையும் விட முக்கியமான பாத்திரத்திம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். சுபலேகா சுதாகர், தேஜ் சப்ரு, ஹரீஷ் உத்தமன், ராகுல் ரவீந்தர், அபிமன்யூ சிங் என பலருக்கு கேமியோ வேடம், ப்ரியங்கா மோகனுக்கு கேமியோவை விட கொஞ்சம் நீளமான பாத்திரம்.
பவனுக்கு மாஸ் சேர்க்கும் வசனங்கள், துறைமுகத்தில் பறக்கும் சிவப்பு கொடிக்கு பின்னால் இருக்கும் கதை, அர்ஜூன் தாஸ் சார்ந்த ஒரு ஃபிளாஸ்பேக் போன்ற பல விஷயங்கள் படத்தில் மிக சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. சாமுராய் வீரர்கள் பற்றிய கதையை இணைத்ததும், சாஹா படத்தை தொடர்புபடுத்தி `சுஜீத் சினிமேட்டிக் யுனிவர்ஸ்' துவங்கியதும் கூடுதல் எக்ஸைட்மென்ட் சேர்க்கிறது. படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் அட்டகாசம். படத்தில் பாதிக்கும் மேல் சண்டைகள்தான் நிறைந்துள்ளது என்றாலும், அவை எந்த விதத்திலும் சோர்வை அளிப்பதாக அமையவில்லை. ரவி கே சந்திரன் - மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு படத்தை படு ஸ்டைலிஷான கேங்ஸ்டர் படமாக கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தின் ஹீரோ எனவே சொல்லும் அளவுக்கு உழைத்திருக்கிறார் தமன். மாஸ் மொமன்ட்ஸ் எல்லாவற்றையும் தன் பின்னணி இசையால் எகிற வைக்கிறார். ஃபையர் ஸ்ட்ரோம் பாடல் எல்லாம் ஹை ஓல்ட்டேஜாக பாய்கிறது.
இப்படத்தில் குறைகள் என சொல்வதென்றால், இரண்டாம் பாதி இன்னுமே கூட அழுத்தமாக இருந்திருக்கலாம். முதல் பாதி வரை யூகிக்க முடிகிற கதையாவே இருந்தாலும் எங்கும் மிஸ் ஆகாமல் பரபரப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி எங்கெங்கோ அலைபாய்கிறது. பிரகாஷ் ராஜூக்கு பவன் ஏன் அவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும், மீண்டும் பிரகாஷ் ராஜ் - பவனை இணைக்க ப்ரியங்கா எதற்கு முயற்சிக்க வேண்டும்? என்ற எமோஷனல் காரணங்களில் அழுத்தமில்லை, க்ளைமாக்ஸ் நெருங்கும் போது இம்ரானின் திட்டம் என்ன என பவனுக்கு எப்படி தெரிகிறது? என்ற லாஜிக் கேள்விக்கும் பதில் இல்லை. மொத்த படத்திலும் எமோஷனல் கனெக்ட் ஹெவியாக மிஸ் ஆவதால் யாருக்கு என்ன ஆனால் என்ன? என்றபடி ஆகிறது. இனிமேல் தான் கதையே ஆரம்பிக்கிறது என க்ளைமாக்சில் OG 2 லீட் வைத்திருப்பதும் அவ்வளவு சிறப்பாக இல்லை. படத்தின் அதீத வன்முறைகளுக்காக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுடன் பார்க்க கூடிய படமில்லை.
ஒட்டு மொத்தமாக பார்க்கையில் ஓரளவு பரபரப்பான கேங்ஸ்டர் படமாக இருக்கிறது இந்த They Call Him OG.