மருத்துவக் கல்லூரியில் படிக்கும் கிருஷ் (முகேன் ராவ்), கீர்த்தனா (ப்ரீத்தி அஸ்ரானி) இருவரும் காதலர்கள். சமூகத்தில் நடக்கும் அநியாயங்களைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தட்டிக்கேட்கும் துணிச்சலான பெண் கீர்த்தனா. அப்படி அவர் வெளியிடும் ஒரு வீடியோவால் ஏற்படும் பிரச்சனையில் காதலர்கள் பிரிகின்றனர். மேலும் அதே இரவில் கீர்த்தனா திடீரெனக் காணாமல் போகிறார். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் கிருஷ் காவல்துறையால் விசாரிக்கப்படுகிறார். மறுபுறம், தனியார் மருத்துவமனையின் தலைவரின் மகள் மஹாவும் (தான்யா ஹோப்) கடத்தப்படுகிறார். இந்த இரண்டு கடத்தல்களுக்கும் என்ன தொடர்பு? இதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதே மீதிக்கதை.
முகேன் ராவ் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முயற்சிக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் கவனம் ஈர்க்கிறார். ப்ரீத்தி அஸ்ரானி துணிச்சலான பெண்ணாகத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். தான்யா ஹோப்பும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நிதின் சத்யா ஒரு வில்லத்தனமான பாத்திரத்தில் வந்து மிரட்ட முயற்சிக்கிறார். சுரேகா வாணி கொடுக்கப்பட்ட வேலையை கட்சிதமாக முடிக்கிறார்.
டி. இமானின் பின்னணி இசை படத்தின் பரபரப்பான காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறது. குறிப்பாக, தந்தை - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் பாடல் கவனம் பெறுகிறது. அதேசமயம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தின் கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும், முதல் பாதியில் திரைக்கதையின் வேகம் சற்று குறைவாக இருப்பது பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. சில காட்சிகளின் தொகுப்பும் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்கிறது.
மொத்தத்தில் பெண்கள் பாதுகாப்பு, சமூக அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது, மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடுகள் போன்ற முக்கியமான விஷயங்களை கிரைம் த்ரில்லர் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறது 'நிறம்'. திரைக்கதையை இன்னும் நேர்த்தியாக எழுதி, படத்தில் விறுவிறுப்பு சேர்த்திருந்தால், நல்ல கிரைம் த்ரில்லர் படமாக்க அமைந்திருக்கும்.