உலகிலேயே தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை காதலிக்கும் ஹீரோ... அந்தக் காதல் என்ன ஆகிறது? என்பதே மிஸ் யூ.
வாசுதேவன் (சித்தார்த்) அநீதிகளை கண்டு பொங்கும் சித்ரா அரவிந்தனிஷ் டைப் இளைஞன். அப்படி அவர் ஒரு அரசியல்வாதியின் மகன் வழக்கில் சம்பந்தப்பட, வாசுவின் மீது கொலை முயற்சி நடக்கிறது. வாசு அதிலிருந்து உயிர் பிழைத்தாலும், தலையில் பலமாக அடிபட்டதால், அவர் வாழ்வில் கடந்த இரண்டு வருடங்கள் நடந்த சம்பவங்கள் மறந்து போகிறது. மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்த பின், வெளியூர் கிளம்பும் வாசு, பாபியை (கருணாகரன்) சந்திக்கிறார். பின்னர் அவருடன் இணைந்து பெங்களூர் கிளம்புகிறார். அங்கு சுப்புலெட்சுமியை (ஆஷிகா ரங்கநாதன்) கண்டதும் காதல் கொள்கிறார் வாசு. எப்படியாவது சுப்புலட்சுமியை ஈர்க்க நினைக்கும் வாசு, அதன் பின் தெரிந்து கொள்ளும் ஒரு உண்மை அதிர்சசியை தருகிறது. அதன் பின் இந்த காதல் என்ன ஆகிறது? வாசு - சுப்பு சேர்ந்தார்களா? அரசியல்வாதி பிரச்சனை என்ன ஆனது என்பதெல்லாம் தான் `மிஸ் யூ'வின் மீதி யூ.
இது ஒரு பிரெஷ்ஷான கதை கிடையாது, ஆனாலும் படத்தை ஓரளவு நன்றாக கொண்டு செல்கிறார் இயக்குநர் ராஜசேகர். படத்தில் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும் காமெடிகளும் அதற்கு உதவுகிறது. ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளைப் பற்றிய இப்படத்தில் சில வசனங்களும் கவனிக்க வைக்கிறது. "நம் மறதிகளால் எப்போதும் பிரச்சனை இல்லை, நம் நினைவுகளால் தான் எப்போதும் பிரச்சனை" என்ற வசனம் நச். வசனகர்த்தா அஷோக்கிற்கு வாழ்த்துகள். நினைவுகளும் - மறதிகளும் தான் இப்படத்தின் மையமே. அதை வைத்து திரைக்கதையை நகர்த்தியதும் நல்ல மூவ்.
சித்தார்த் தன்னால் முடிந்த வரை அந்தக் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்துகிறார். சித்தார்த்துடனான உரையாடல், காதலை வெவ்வேறு தருணங்களில் மறுப்பது போன்ற காட்சிகளில் கவர்கிறார் ஆஷிகா. இவர்களுக்குப் பிறகு பாலசரவணன், அனுபமா, ஜெயப்பிரகாஷ், பொன்வண்ணன், கருணாகரன் ஆகியோர் கதாப்பாத்திரங்களுக்கு தேவையான வேலையை செய்திருக்கிறார்கள். சரத் லோகித்சவா மிக மிக டெம்ப்ளேட்டான வில்லன் வேடம், அதை வழக்கமான விதத்திலேயே நடித்துக் கொடுக்கிறார். இக்கூட்டத்தில் தனியாக ஸ்கோர் செய்வது மாறன் தான். அவரது ஒன்லைனர்கள் பல இடங்களில் வெடிச் சிரிப்பை வரவழைக்கிறது.
படத்தின் குறைகள் எனப் பார்த்தால், படத்தின் ரைட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். முன்பு சொன்னது போல, இது மிக பிரஷ்ஷான கதை இல்லை. மேலும் படத்தில் பல க்ளிஷே காட்சிகள், வசனங்கள். எளிதில் யூகிக்க முடிகிற திருப்பங்கள் போன்றவை பெரிய ஏமாற்றத்தை அளிக்கின்றன. வாசு கதாப்பாத்திரம் எதற்காக சினிமா இயக்குநராக முயற்சி செய்கிறார் என்பதும், ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல் காபி பற்றிய காட்சியும், பின்னால் வரக்கூடிய ஒரு இணைப்புக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை படத்திற்குள் திணித்து வைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
மேலும் அவர் கூர்க் செல்வதன் காரணம் என்ன? திடீரென ரயில் நிலையத்தில் பரிட்சயம் ஆகும் நபருக்கு தெரப்பிஸ்ட் ரேஞ்சில் அட்வைஸ் செய்வதும், பிறகு அவருடனே கிளம்பி பெங்களூர் செல்வதும் என கொஞ்சமும் நம்ப முடியாத வகையில் இருக்கிறது. படத்தின் முக்கியமான ஒரு ஜோடிக்கு இடையே வரும் பிரச்சனைகளும், அதன் காரணங்களும் மிக சாதாரணமாகவே இருக்கிறது. எனவே படத்தில் அவை எந்த அழுத்தத்தையும் சேர்க்கவில்லை. வெறும் சீரியல் லெவலில் தான் இருக்கிறது.
படத்தின் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. மேலும் பின்னணி இசை மோசமில்லை என்றாலும், எல்லாமும் எங்கேயோ கேட்ட தேஜாவூ பீல் தான் கொடுத்தது. இடைவேளையில் வரும் இசை அப்படியே தைகுடம் ப்ரிட்ச்லிருந்து எடுத்து காந்தாராவில் பயன்படுத்தப்பட்ட, அதே டெய்லர் அதே வாடகை.
மொத்தத்தில் இது கொஞ்சம் ஓகேவான ரொமான்டிக் காமெடி படம். பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போனால் பொழுதுபோக்கை கொடுக்கலாம்.