Soodhu Kavvum 2 | Shiva
Soodhu Kavvum 2 | Shiva Soodhu Kavvum 2

Soodhu Kavvum 2 | எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..!

தமிழ் சினிமாவின் கிளாசிக்கான நாயகனை பல வருடங்கள் கழித்து வேறொரு கும்பல் அதே பெயரில் படமெடுத்து சின்னபின்னமாக்கியது. சூது கவ்வும் என்கிற செம்ம ஜாலியான படத்தை, அதே தயாரிப்பு நிறுவனம் சின்னபின்னமாக்கியிருக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம்.
Published on
Soodhu Kavvum 2(1 / 5)

சூது கவ்வும் படத்துக்கு முன்னும் பின்னும் ஒரு கதையை உருவாக்கி வேண்டா வெறுப்பாக சூது கவ்வும் படத்தை அதனுள் வைத்தால் , அதுதான் சூது கவ்வும் 2.

சூது கவ்வும் விஜய் சேதுபதி கும்பல் போலவே இன்னொரு கும்பலும் அதே கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. அந்த கும்பலுக்குத் தலைவர் விஜய் சேதுபதியின் கசின் 'அகில உலக சூப்பர் ஸ்டார்' சிவா. கொள்ளை வழக்கில் தன் கும்பலைக் காப்பாற்ற சிவா கைதாக வேண்டிய சூழல் உருவாகிறது. இந்த இடத்திலிருந்து சில ஆண்டுகள் கழித்து சூது கவ்வும் முதல் பாகம் தொடர்கிறது. சூது கவ்வும் கதைக் களத்திலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூது கவ்வும் 2 ஆரம்பிக்கிறது. ஊழல் மலிந்த அரசு ஒரு பக்கம், அந்த அரசை நடத்தும் மோசமான கட்சியை உருவாக்கியவர் ஒரு பக்கம் என சைடு டிராக்கில் இன்னொரு கதை சொல்லப்படுகிறது. அந்த இரண்டு கதைகளிலும் பொதுவாக இருக்கும் கருணாகரன் குடும்பம் இந்த இரண்டு கதையையும் எப்படி இணைக்கிறது என்பதையும் ஒரு கதையாக சொல்லிக்கொள்ளலாம். இப்படியாக எப்படி எப்படியோ எடுத்து அதை எப்படி எப்படியோ இணைத்து அடுத்த பார்ட் லீடுடன் படத்தை முடித்திருக்கிறார்கள்.

ஒரு படத்தில் சுவாரஸ்யமான காட்சிகளை எடுக்க குழுவாக அமர்ந்து யோசிப்பார்களாம். அப்படி யோசிக்கையில் பெரும்பாலும், டீ, ஸ்நாக்ஸ், மதுபானம் என பல பொருட்கள் அந்த அறைக்குள் போய்க்கொண்டு இருக்கும். எந்தவொரு காட்சியையும் சுவாரஸ்யமாக யோசிக்கத்தெரியாத 'சூது கவ்வும் 2 ' குழு குடிக்கும் காட்சியையே அப்படியே திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். சூது கவ்வும் திரைப்படத்தில் இருந்து நால்வர் குழு, கருணாகரன் குடும்பம், கடத்தல், அருள்தாஸ், ராதாரவி, கற்பனைப்பெண், கடமை தவறாத காவல்துறை அதிகாரி போன்ற கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள். இதிலும் கடத்தல் தான் கதைக்கரு. ஆனால், வேறு காட்சிகளை யோசிக்க திறமை வேண்டுமே. அதற்குப் பதிலாக சிவா குடிக்கிறார், குடிக்கிறார், குடித்துக்கொண்டே இருக்கிறார். சிவாவின் அடியாட்களாக வரும் இருவரும் குடித்துக்கொண்டேயிருக்கிறார்கள். திரையரங்கில் அமர்ந்திருக்கிறோமா அல்லது டாஸ்மாக்கில் அமர்ந்திருக்கிறோமா என்னும் அளவுக்கு குடி காட்சிகளை படத்தில் ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள். சூது கவ்வும் திரைப்படத்தில் இருட்டு அறை காமெடி முரட்டுத்தனமாக வொர்க் அவுட் ஆகியிருக்கும். அப்ப நாம இதுல வெள்ளை அறை போட்டுடுவோமா பாஸ் என யாரோ ஐடியா கொடுத்திருக்கிறார். அட, நல்லா இருக்கே என படத்தின் ஆரம்பத்திலிருந்து வெள்ளை அறை ஒன்றில் சிலரைப் போட்டு கொடுமைப்படுத்துவதைக் காண்பிக்கிறார்கள். உண்மையில், அந்த வெள்ளை அறையைவிட கொடுமையானது சூது கவ்வும் 2 திரைப்படம். அடுத்த முறை, அந்த நபர்களுக்கு தண்டனையாக சூது கவ்வும் 2 படத்தை பார்க்க சொல்லிவிடலாம்.

சுத்தமாய் செல்ஃப் எடுக்காத படத்தை சிவா தான் அவ்வப்போது தண்ணீர் தெளித்து உயிர்த்தெழ வைக்கிறார். ஆனாலும், ம்ஹூம்.



விமர்சனங்களுக்கு எல்லாம் தடை போடும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள். விமர்சனங்களை தடை செய்யும் முன்னர் குறைந்தபட்சம் பார்ப்பது மாதிரியான திரைப்படங்களை எடுப்பது எப்படி என தயாரிப்பு நிறுவனங்களுக்கும், இயக்குநர்களுக்கும் பாடம் எடுங்கள். வீட்டில் வேலை செய்யும் பெண்ணை வைத்து இணைத்துச் சொல்லும் செக்ஸ் காமெடி; சாக்கடையில் முங்குபவரை வைத்து காட்சிப்படுத்தியிருக்கும் காமெடி என அருவருக்கத்தக்க காமெடிகளும், படத்தில் இருக்கின்றன. எழுத்தில்கூட இப்படியான காமெடிகளை எல்லாம் யாரும் இப்போது செய்வதில்லை. கதைக்குழுவின் சீழ்பிடித்த மனங்களே இத்தகைய காட்சிகளில் வெளிப்படுகிறது. இதில் , மக்கள் இலவசங்களுக்கு மயங்கி மோசமான ஊழல் அரசுகளுக்கு வாக்களித்துவிடுகிறார்கள் என்கிற தத்துவத்தை வேறு படம் சொல்கிறது. முதல்ல சினிமாவ ஊழல் இல்லாம எடுங்க பாஸ்..!

தமிழ் சினிமாவின் கிளாசிக்கான நாயகனை பல வருடங்கள் கழித்து வேறொரு கும்பல் அதே பெயரில் படமெடுத்து சின்னபின்னமாக்கியது. சூது கவ்வும் என்கிற செம்ம ஜாலியான படத்தை, அதே தயாரிப்பு நிறுவனம் சின்னபின்னமாக்கியிருக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com