Vishal | SJ suryah  | mark antony
Vishal | SJ suryah | mark antony Mark ANtony
திரை விமர்சனம்

Mark Antony review | மாத்தி மறந்து மாறிப்போய் வர வச்சுட்டீங்க SJ சூர்யா & டீம் ... செம்ம..!

karthi Kg

கேங்ஸ்டர் குடும்பத்தில் ஒரு டைம் டிராவல் லேண்டுலைன் கிடைத்தால் என்ன நடக்கும் என்பதே மார்க் ஆண்டனி.

ஊரிலேயே மிகப்பெரிய கேங்ஸ்டர் ஜாக்கி. அவரின் மகன் மதன். ஜாக்கியின் கூட்டாளி மார்க்கின் மகன் ஆண்டனி. நல்லதொரு நாளில் ஆண்டனியின் கைகளுக்கு டைம்டிராவல் வசதியுடன் கூடிய லேண்டுலைன் ஒன்று கைக்கு கிடைக்கிறது. தன் அப்பா எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ள ஆண்டனி செய்ய ஆரம்பிக்கும் கால், அடுத்தடுத்து பல கால்களாக மாறுகிறது. அது எந்த எந்த பிரச்னைகளை எல்லாம் உருவாக்குகிறது என்பதை ரகளையாக சொல்கிறது இந்த மார்க் ஆண்டனி.

படத்தின் பெரும்பலம் SJ சூர்யா. இந்தப் படத்தின் கதையைக் கேட்டது, ' எல்லா நல்லா கதையும் எனக்கே வருகிறது' என ட்விட் செய்திருப்பார் சூர்யா. அப்படியானதொரு கதாபாத்திரம் . பிரமாதப்படுத்தியிருக்கிறார். இரண்டு கெட்டப்களுக்குமான மாடுலேசன் , டான்ஸ் , டைமிங் என எல்லாமே பக்கா. நொடிக்கு நொடிக்கு மேனரிசத்தை மாற்றுவது, அப்பா சூர்யாவைத் திட்டுவது என எல்லாவற்றையும் நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார். மகன் விஷாலைவிடம் படத்தில் அதிகம் ஈர்ப்பது அப்பா விஷால் தான். டான்ஸ், க்ளைமேக்ஸ் கெட்டப் என கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் அப்பா கதாபாத்திரம் செம்ம மாஸ். ஆனால், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு நடித்திருக்கலாமே விஷால் என்று சொல்ல வைத்துவிடுகிறது. அப்பா விஷாலுக்கு அபிநயா, மகன் விஷாலுக்கு ரீதுவர்மா ஜோடியாக வருகிறார்கள். காமெடிக்கு YG மகேந்திரனும், கிங்ஸ்லியும் வருகிறார்கள். கதாபாத்திர தேர்வுகளில் சொதப்பல் என்றால் அது இவர்கள் இருவரும் தான். சுனிலுக்கு நல்லதொரு கதாபாத்திரம் என்றாலும், ' பஞ்சுமிட்டாய் சேலை கட்டி ' பாடலுக்கு நடனமாட விட்டிருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ்

Vishal | SJ Suryah

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படம் 18+ என்பதைக் கடந்து பல சர்ச்சைகள் . அதன் பின்னர் வெளியான எல்லாம் படமுமே சறுக்கல்கள் தான். அதை எல்லாவற்றையும் இந்தப் படத்தின் மூலம் உடைத்து எறிந்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். கெட்டவர் என நினைத்த அப்பா நல்லவர், அவரைக் காப்பாற்ற ஒரு மகன் எந்த எல்லை வரை செல்வான் என்கிற பழகிப்போன ஒன்லைன் தான். ஆனால், அதை வைத்து ரகளை செய்திருக்கிறார். காஸ்டியூம்ஸ், வசனங்கள், ரெட்ரோ மியூசிக் என எல்லாமும் பக்காவாக மார்க் ஆண்டனியில் செட் ஆகியிருக்கிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் ஆத்விக். இரண்டு காலத்துக்குமான விஜய் முருகனின் கலை அமைப்பு செம்ம. சில காட்சிகளில் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு அட சொல்ல வைக்கிறது. படத்தின் பெரும்பகுதி சண்டைக் காட்சிகள் தான். பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், கனல் கண்ணன் என ஒட்டுமொத்த டீமுக்கு வாழ்த்துகள். மாஸ் பிஜிஎம், பழைய பாடல்களை பயன்படுத்தியது என ஜிவி பிரகாஷும் வெரைட்டி விருந்து வைத்திருக்கிறார். விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு படத்தில் இருக்கும் dull மொமண்ட்களை பெருமளவு குறைத்திருக்கிறது. 'கெட்டதுல என்னடா நல்லது, நல்லதுல என்னடா கெட்டது' , ' நானே மாத்தி மறந்து மாறிப் போய் வந்திருக்கேன்' , ' அவன் அவங்க அப்பாக்கு ஒரு போன் தான் போட்டா' என பல வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.

இத்தனை இருந்தும் ஆதிக் ரவிச்சந்திரனின் எழுத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். இன்னமும் எத்தனை நாள்களுக்கு பொட்டை போன்ற வசனங்களை பயன்படுத்துவார் என தெரியவில்லை. மறைந்துபோன நடிகை சில்க்கை நல்லதொரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், அங்கேயும் மாடுலேசன் என்கிற அதை மாற்றி வைத்திருக்கிறார். படத்தின் காலகட்டம் 1975,1995 அதனால் transphobic விஷயங்களை கடந்துவிடலாம் என்று தோன்றலாம். ஆனால், ஆதிக்கின் டிராக் ரெக்கார்டு அவர் படத்தை 2050 என்கிற காலகட்டத்தில் எடுத்தாலும் இத்தகைய வசனங்களை தவிர்க்கமாட்டாரோ என்று தோன்றுகிறது. தியேட்டர் மொமண்ட்களுடன் கூடிய நல்லதொரு கமர்ஷியல் படம் எடுப்பதற்கான எல்லா திறமைகளும் உங்களுக்கு இருக்கிறது ஆதிக். கீழான சிந்தனைகளை அடுத்த படைப்புகளில் இருந்தாவது தவிர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

வன்முறை ஜாஸ்தி என்பதால், குடும்பத்துடன் பார்க்கலாம் என நினைத்தல் தவறு. நண்பர்களுடன் இந்த வீக்கெண்டை ஜாலியாக எஞ்சாய் செய்ய நல்லதொரு கமர்ஷியல் மசாலா எண்டெர்டெய்னர் இந்த மார்க் ஆண்டனி.