மர்மமான ஒரு மரணம் மூலம் வெளிச்சத்திற்கு வரும் உண்மைகளே... குமார சம்பவம்!
குமரன் (குமரன் தியாகராஜன்) சினிமா இயக்குநராகும் முயற்சிகளில் இருப்பவர். மேல் வீட்டில் குடியிருக்கும் சமூக போராளி வரதராஜனால் (குமரவேல்), சில பிரச்சனைகள் வீடு தேடி வர அவரோடு சின்ன சின்ன உரசல், தன் படத்திற்கு தயாரிப்பாளர் தேடல் என நகர்கிறது அவரது வாழ்க்கை. திடீரென குமரனின் தாத்தா சுப்பையா (ஜி எம் குமார்) இறந்துவிட, அவரின் சொத்தான வீட்டை விற்று பங்கை பிரித்தளிக்கும் பொறுப்பு குமரனுக்கு வருகிறது. தனக்கு வரும் பங்கில் படத்தை எடுத்துவிடலாம் என நினைக்கும் குமரன் அந்த வேலைகளை துவங்குகிறார். இந்த சூழலில் மேல் வீட்டு வாடகைதாரர் வரதராஜன் மர்மமான முறையில் இறந்துவிட, வீட்டை விற்பதில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனையை சரி செய்ய குமரன் எடுக்கும் முயற்சிகள் என்ன? அதன் மூலம் அவர் தெரிந்து கொள்ளும் உண்மைகள் என்ன? என்பதை காமெடி கலந்த ஒரு இன்வஸ்டிகேஷன் சம்பவமாக சொல்வதே இந்த `குமார சம்பவம்'.
இயக்குநர் பாலாஜி வேணுகோபால், எமோஷனல் + காமெடி படத்தை ஒரு இன்வஸ்டிகேஷன் ஜானரில் கொடுக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஒரு குடும்பம், அதில் சில கதாபாத்திரங்கள், இவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அதற்குள் எங்கெல்லாம் காமெடி சேர்த்து கொடுக்க முடியும் என்ற முனைப்பு படம் நெடுகிலும் தெரிகிறது.
நடிப்பு பொறுத்தவரை முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள குமரன் தியாகராஜன், சீரியல் to சினிமா என்ற அவரது இந்த என்ட்ரிக்கு வாழ்த்துகள். கதைக்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார். எமோஷன் காட்சிகளில் சிறப்பு என்றாலும், சில காமெடி டயமிங் சற்றே மிஸ்ஸாகிறது. சமூக போராளியாக குமரவேல் கச்சிதம். குமரனின் வெறுப்பை பார்த்து கலங்கும் இடம், ஜி எம் குமார் பாசம் பார்த்து நெகிழ்வது என அளவான நடிப்பு. காமெடி பொறுத்தவரை பாலசரவணன் கவுண்டர்கள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக ஒரு காட்சியில் "இந்த சீன்ல எதுக்குடா நானு" என்பதெல்லாம் தெறி ரகம். சில காட்சிகளிலேயே வந்தாலும் வினோத் சாகர் நடிப்பும் காமெடிக்கு பக்காவாக உதவுகிறது. போலீசாக வரும் சிவா, தயாரிப்பாளராக லிவிங்ஸ்டன், மாமாவாக வரும் வினோத் முன்னா, தங்கையாக வரும் நந்தினி என சின்னச் சின்ன ரோலில் பலர் வருகிறார்கள். படத்துக்கு தேவையான நடிப்பை கொடுக்கிறார்கள்.
ஒவ்வொரு கதாப்பாத்திரங்களின் கதையை ஜாலியான பெயர்கள் பிடித்தது சேப்டராக சொன்னது, கொலையாளி யார் என விசாரிக்கும் மிஷன்களின் நடக்கும் காமெடி, போகும் போக்கில் சின்னதாக வாய்ஸ் ஓவரில் வரும் கவுண்டர் என படம் எங்கும் காமெடிக்கு குறை இருக்கக் கூடாது என உழைத்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு சுவாரஸ்யமான கோணங்கள் மூலம் படத்தை அழகுபடுத்துகிறார். அச்சு இசையில் பாடல்கள் இதமாக இருக்கிறது.
படத்தின் மைனஸ் என்னவென்றால், எமோஷன் கதையாக இருக்கும் படம், திடீரென இன்வஸ்டிகேஷன் மோடுக்கு மாறுவது இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம். இன்வஸ்டிகேஷனில் நடக்கும் காமெடிகள் நன்றாக இருந்தாலும் திடீரென ட்ராக் மாறுவது உறுத்தல். ஜி எம் குமார் - குமரவேல் இடையிலான நட்பு வெறும் வசனங்கள் மூலமாகவே கடத்தப்படுவதாலோ என்னவோ, எந்த அழுத்தமும் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹீரோயின் பாயல் ராதாகிருஷ்ணனுக்கு இன்னும் சிறப்பான பாத்திரம் கொடுத்திருக்கலாம். ஹீரோவுக்கு புத்தகம் கொடுப்பது மட்டுமே படத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவம். இப்படி சில குறைகள் இருந்தாலும் படம் ஒரு நல்ல பொழுது போக்கை தரும் என்பது உறுதி.