ஊரை காக்க இருவர் எடுக்கும் ரிஸ்க் தான் `கொம்பு சீவி'
ஆண்டிபட்டி பகுதியில் வசிக்கும் பாண்டி (சண்முக பாண்டியன்) சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து ஆதரவின்றி தவிக்கும் போது, அவருக்கு தோள் கொடுக்கிறார் ரொக்கப்புலி (சரத்குமார்). ஊருக்குள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரொக்கப்புலிக்கு, பக்க புலியாக நிற்கிறார் பாண்டி. வைகை அணை நீர் ஏறி விவசாய நிலங்கள் நீரில் மூழ்கினால் அந்தக் கரையை ஒட்டி வாழும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சிலர் பரிதவித்து நிற்க, பலர் பாதை மாறி தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க செல்கின்றனர். அப்படி தவறான பாதையில் சென்று கஞ்சா பயிரிட்டு கடத்தும் வேலையை பார்ட் டைமாக செய்கின்றனர் ரொக்கப்புலி குழு. புதிதாக வரும் போலீஸ் லைலா (தார்னிகா) மீது பாண்டிக்கு காதல். அந்தக் காதலால் தன் தவறுகளை திருத்திக் கொண்டு புது வாழ்க்கையை துவங்குகிறார் பாண்டி. ஆனால் அதற்கு ஒரு சிக்கல் வருகிறது, அது என்ன? அதை எப்படி சரி செய்கிறார்? என்பதே மீதிக்கதை.
பொன்ராம் எப்போதும் போல ஒரு சீரியஸான பிரச்னையை தன்னுடைய வழக்கமான காமெடி ஃபார்முலா கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார். வெகு சில இடங்களே என்றாலும் அவரது காமெடி பலமாக வேலை செய்திருக்கிறது.
நடிப்பாக நம்மை கவர்வது ரொக்கப்புலி மாமாவாக வரும் சரத்குமார். சென்ற முறை `ட்யூட்' படத்தில் காமெடி கலந்து வில்லத்தனம் செய்தவர், இம்முறை ஊர் பக்கம் போய் லந்து கொடுக்கிறார். மொக்கை காமெடிகளை போடுவதும், ராதிகா தெரியுதான்னு பாக்குறேன் என சொல்வது, அவரின் டயலாக்கை அவருக்கே போட்டு லாக் செய்வது எனப் பல இடங்களில் மனிதர் பட்டையை கிளப்புகிறார். ஆனால் அந்த சுண்ணாம்பு பூசிய விக் மட்டும் சுத்தமாக செட்டாகவில்லை. ஹீரோ சண்முக பாண்டியன் சண்டை காட்சிகளில் மட்டும் பாஸ் ஆகிறார். நடிப்பில் இன்னும் நெடு தூரம் போக வேண்டும் ப்ரோ. ஹீரோயினாக தார்னிகா காமெடி போலீஸ் ஆக வந்து போகிறார்.
பொன்ராமின் ஸ்பெஷலே காமெடிதான், அதிலும் silly jokes வைத்து அவர் இப்படத்தில் வைத்திருக்கும் இரண்டு காமெடிகளுக்கு செம ரெஸ்பான்ஸ். கோர்ட்டில் நடக்கும் விசாரணையாக இருக்கட்டும், லாரியை வைத்து வரும் காமெடியாக இருக்கட்டும் படத்தின் ஹைலைட்டே அவை தான்.
டெக்கனிகலாக படத்திற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். புழுதி பறக்கும் நிலம், பச்சை போர்த்திய இடம், திருவிழா என அனைத்து காட்சிகளையும் பார்த்து பார்த்து பதிவு செய்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை படத்தில் இல்லாத எமோஷனை இருப்பதாக காட்ட முயற்சிக்கிறது. கருப்பன் பாடல் எனர்ஜி ஏற்றுகிறது.
இப்படத்தின் குறைகள் கண்டிப்பாக எழுத்துதான். படம் எதை சொல்ல வருகிறது என்பதில் எந்த தெளிவும் இல்லை. ஆண்டிபட்டி மக்கள் நிலங்கள் நீரில் மூழ்குவதை பேசுகிறதா? கஞ்சா கடத்தும் இருவரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை சொல்கிறதா? எதிலும் முழுமையே இல்லாமல் திக்கு தெரியாமல் அலைகிறது. படம் துவங்குவதே சரத்குமார், சண்முக பாண்டியனுக்கு அடைக்கலம் தருவது தான். ஆனால் அவர்களுக்கு இடையிலான உறவில் எந்த எமோஷனும் இல்லை. ஊரில் ஒரு பெண் மேல் ஆவியாக வந்து தலையில் என்னை தேய்க்கும் அம்மா, தேவை இல்லாத ஒரு காதல் டிராக், காமெடி டிராக், வினோதமான வில்லன் டிராக் என திரைக்கதையில் ஒட்டாமல் என்னென்னவோ படத்தில் வருகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் வரை காமெடியாக நகரும் கதை, திடீரென டிராக் மாறி ஏன் டிராஜிடியாக மாறுகிறது? என்பதற்கு எந்த கவனமும் கொடுக்கப்படவில்லை. ஒரு நல்ல படத்தை கொடுக்க எல்லா விஷயங்களும் இருந்தும், அதை சரிவர எழுதாமல் எடுக்காமல் தடுமாறி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் சில இடங்களில் மட்டும் சிரிப்பை வரவழைக்கும் சுமாரான படமாக முடிகிறது இந்த கொம்பு சீவி.