ஒரு பெண்ணின் விருப்பம் அதற்கு எதிரான அவரது குடும்பம் என்ற முரணை சொல்லும் கதையே `அங்கம்மாள்'.
திருநெல்வேலியின் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண் அங்கம்மாள் (கீதா கைலாசம்). ஊருக்குள் பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கு இரு மகன்கள். மூத்தமகன் சுடலை (பரணி) விட்டேத்தியாக ஒரு வாழ்க்கையை நடத்துகிறார். இளைய மகன் பவளம் (சரண்), மருத்துவம் படித்துவிட்டு கிராமத்திற்குத் திரும்புகிறார். பவளம் தன் காதலி ஜாஸ்மின் (முல்லை அரசி) குடும்பத்தினரை தனது தாயிடம் அறிமுகப்படுத்தும் தயாரிப்புகளில் இருக்கிறார். ஆனால் அதில் ஒரு சிக்கல், தன் வாழ்நாள் முழுக்க ரவிக்கை அணியாமல் இருந்த தன் அம்மா அங்கம்மாளை, ரவிக்கை அணிய வைக்க வேண்டும், அப்போதுதான் காதலி குடும்பத்தார் முன், தன்னுடைய அம்மா பண்பட்டவளாக பார்க்கப்படுவாள் என நினைக்கிறான். அதற்கு திட்டம் தீட்டிக் கொடுக்கிறார் சுடலையின் மனைவியும், அங்கம்மாளின் மருமகளுமான சாரதா (தென்றல் ரகுநாதன்). இதற்கு அங்கம்மாள் சம்மதிக்கிறாளா? இந்த முயற்சிகளின் ஊடாக அந்தக் குடும்பம் பற்றியும், ஊர் பற்றியும் நமக்கு சொல்லப்படுவது என்ன? என்பதுதான் `அங்கம்மாள்' பட மீதிக்கதை.
பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்ற சிறுகதையை, அழகியலோடும், யதார்த்தத்தோடும் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன். அங்கம்மாள் என்ற ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி அதன் மூலம் குடும்ப அமைப்பு, அடக்குமுறை, எது நவீனம் என பல விஷயங்களை பேசுகிறது படம். மிகச் சிக்கலான உணர்வுகளை பற்றி பேசும் படம் என்றாலும், படம் முழுக்க விரவிக்கிடக்கும் நகைச்சுவையும், மென்மையும் நம்மை எளிதில் படத்திற்குள் ஈர்க்கிறது.
படத்தின் முக்கிய பலம் நிச்சயமாக அங்கம்மாளாக நடித்துள்ள கீதா கைலாசம். படத்தின் மைய பாத்திரம் என்பதை தாண்டி, அவர் அந்த பாத்திரமாகவே மாறி இருக்கும் விதம், நுட்பமான உணர்வுகளை வெளிக்காட்டுவது என ஆச்சர்யப்படுத்துகிறார். கையில் சுருட்டுடன் அலைவது, தெருவில் நடந்து செல்லும் புதுமணத் தம்பதிகளை கேலி செய்வது, உள்ளூர் ஆணின் மீது அவள் கொண்டிருக்கும் ரகசியமான காதலை ஏக்கத்தோடு வெளிப்படுத்துவது, பல்வேறு அழுத்தங்கள் காரணமாக வேறு ஒரு நபராக மாறுவது என ஒவ்வொரு காட்சியிலும் அசத்துகிறார். சரண் சக்தி, பரணி, தென்றல் ரகுநாதன், முல்லை அரசி ஆகிய அனைவரும் இப்படத்திற்கு மிக அழுத்தமான நடிப்பை தங்கள் பாத்திரங்கள் மூலம் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் எழுத்து திருத்தமாக இருப்பதை பல இடங்களில் உணர முடிந்தது. அதில் இரு விஷயங்களை சொல்லலாம். ஒன்று ஏதோ ஒரு புரியாத விஷயத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில்தான் இந்த மொத்த குடும்பமும் ஈடுபடுகிறது. சுடலைக்கு ஏன் தன் அம்மா, தன்னைவிட இளைய மகனுக்கு பாசத்தை கொடுத்தார் என்பது புரியவில்லை, ஒரு ரவிக்கை அணிவதில் அம்மாவுக்கு அப்படி என்ன பிரச்சனை என்பது பவளத்துக்கு புரியவில்லை, எதற்காக மாமியார் தன்னை இப்படி நடத்துகிறார் என்பது சாரதாவுக்கு புரியவில்லை, ரவிக்கை அணிவதுதான் நாகரீகம் என சொல்லும் இந்த சமூகத்தை அங்கம்மாவாள் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் எதற்கு இத்தனை போராட்டங்கள் என அங்கம்மாளின் பேத்தி பெரிய நாயகி (எ) மஞ்சுவுக்கு புரியவில்லை.
இன்னொன்று நவீனத்தின் மிக முக்கிய ஆதாரமே அது மனிதர்களுக்கான சௌகர்யத்தை வழங்கும் என்பதுதான். வாழ்க்கையை எளிமை ஆக்க வந்தவையே எல்லா கண்டுபிடிப்புகளும். ஆனால் ரவிக்கை அணிவதை அசௌகரியமாக நினைக்கும் ஒரு பெண்ணுக்கு, நாகரீகத்தின் பெயரிலும், நவீனத்தின் பெயரிலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்ற முரணும் சிறப்பாக பதிவாகி இருக்கிறது. 25 வருடங்களுக்கு ஒருமுறை ஊரை தாக்கும் உச்சி மலை காற்றை கலாச்சாரத்தின் குறியீடாகவும், உச்சாணிப் பூவின் நறுமணத்தை மாற்றங்களாகவும், இந்த மாற்றத்திற்கு நடுவே பலர் காணாமல் போவதை சொல்லி இருந்த விதமும் ரசிக்க வைக்கிறது. இந்தப் படத்தில் சொல்லப்படும் சிக்கல்கள் இன்னும் கூட வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கலாம், அது இந்தக் கதையை எளிமையாக இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கி இருக்கும். இவற்றை குறையாக சொல்லலாம்தான். ஆனால் அது தரக்கூடிய ஒரு மர்மமான தன்மை இந்தப் படத்தின் மீது கூடுதல் ஈர்ப்பையே வழங்குகிறது.
அஞ்ஜோய் சாமுவேலின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த அழகுணர்ச்சியோடும் நேர்த்தியோடும் பதிவு செய்கிறது. அந்த ஊரின் நிலப்பரப்பும், அந்த மனிதர்களின் மன ஓட்டங்களும் பிரதிபலிக்கும் படியான காட்சி அமைப்புகள் அத்தனையும் அழகு. முகமது மக்பூல் மன்சூர் இசையும் பாடலும் படத்தின் உணர்வுகளை தடுக்காமல், நிறைய மௌனங்களுக்கு இடம் அளித்து தேவையான இடங்களில் மட்டும் அழுத்தம் சேர்க்கிறது. அங்கம்மாள் பெண்கள் எதிர்கொள்ளும் திணிப்புகள் பற்றி நேர்த்தியாக பேசுகிறது. இவை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப்படாமல் போகலாம் அல்லது பெரிய வாதம் தேவைப்படலாம். ஆனால், எந்த எதிர்ப்பும் வெளிப்படுத்தாமல் போவதால், செய்யக்கூடிய சமரசங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டவை, அதைத்தான் அங்கம்மாள் சுருக்கமாகக் கூறுகிறார்.
மொத்தத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் பிரச்சனையை பற்றி, இதுவரை பேசாத ஒரு கோணத்தில் பேசியிருக்கும் படமாக கவனிக்க வைக்கிறது `அங்கம்மாள்'. கண்டிப்பாக நல்ல சினிமா அனுபவத்தை கொடுக்கும், என்பதில் சந்தேகம் இல்லை. படம் டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது.