தன் காதலைக் காப்பாற்ற குடும்பத்துடன் போராடும் இளைஞனின் கதையே `ஹேப்பி ராஜ்'
ஹேப்பி ராஜ் எ ஆனந்த ராஜ் (ஜி வி பிரகாஷ் குமார்) தனக்கு ஒரு காதலும் அமையவில்லை என்ற ஏக்கத்தோடு இருக்கிறார். அதற்கு முக்கியக் காரணம், அவரது அப்பா காத்தமுத்து (ஜார்ஜ் மரியான்). அவரது தோற்றத்துக்காக ஊர் முழுக்கக் கேலிப்பொருளாக பார்க்கப்படுவது. எனவே தன் தந்தையைவிட்டுப் பிரிந்து வாழ்வதுதான், தனக்கு காதல் அமைய ஒரே வழி என பெங்களூரு செல்கிறார். அங்கு வேலைக்குச் சேரும் இடத்தில் அவர் சந்திக்கும் காவ்யாவை (ஸ்ரீ கௌரி ப்ரியா) கண்டதும் ஹேப்பிக்கு காதல். பின்னர் காவ்யாவுக்கும் அவரைப் பிடிக்க காதல் ஸ்டார்ட் ஆகிறது. எல்லாம் சரியாக திருமணத்தை நோக்கிச் செல்லும்போது ஒரு பெரிய ஈகோ மோதல் வந்து பிரச்னை துவங்குகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? ஹேப்பி - காவ்யா ஜோடி இணைந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை.
கலர்ஃபுல் படத்தில் கலகலப்பாக கதையும், அதே சமயத்தில் ஒரு மெசேஜ் சொல்லவும் முயன்றிருக்கிறார் இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன்.
ஜிவி பிரகாஷ் குமார் தனது வழக்கமான நடிப்பைத்தான் இதிலும் கொடுத்திருக்கிறார். முக்கால்வாசி படத்தின் காமெடியையும், கால்வாசி படத்தின் எமோஷனையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு. ஆனால் இரண்டிலும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஸ்ரீ கௌரி ப்ரியா படத்தின் ஜாலி ஏரியாக்களிலும், பிரிவு நினைத்து வரும் இடங்களிலும் சிறப்பாக நடிக்கிறார். இப்படத்தையே தாங்க வேண்டிய பாத்திரங்கள் ஜார்ஜ் மரியான் மற்றும் அப்பாஸ்.
ஆனால் இருவருக்குமான காட்சிகள் எதுவுமே சுவாரஸ்யமாக இல்லை. மதுரமுத்து, அதிர்ச்சி அருண் என கூடுதல் காமெடியன்கள் இருந்தும் படத்தில் காமெடி மட்டும் எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. இரண்டாம் பாதியில் ஜார்ஜ் மரியான் வைத்து வரும் சென்டிமென்ட் காட்சி மட்டும் படத்துக்கு அழுத்தம் சேர்க்கிறது.
இப்படத்தின் பிரச்னைக்குரிய விஷயமே மேக்கிங் தான். படத்தில் எல்லோரும் ரிலேட் செய்யக்கூடிய கன்டென்ட் இருந்தும், அதனை எப்படி சுவாரஸ்யமாக கொடுப்பது என தெரியாமல் திணறி இருக்கிறார்கள். இப்படம் பேசப்போவது அப்பா - மகன் இடையேயான பாசத்தைத்தான் என்றால், அதை ஹைலைட் செய்யாமல், தேவை இல்லாத ரொமான்ஸ், காமெடி என கதை எங்கெங்கோ செல்கிறது. கிராமத்து மக்கள் நல்லவர்கள், நகரத்தில் இருப்பவர்கள், அகங்காரம் பிடித்தவர்கள் என்ற ட்ரோப் எல்லாம் அரதப்பழசு. கூடவே அது எதார்த்தமும் இல்லை என்பதால் படத்தில் அந்த போர்ஷன் சுத்தமாக வேலைக்கு ஆகவில்லை.
மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு படத்தை மிகத் தரமாக, கலர்ஃபுல் ஆக படத்தைக் கொடுத்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையும், பாடல்களும் ஓகே ரகம்.
கதையாக சுவாரஸ்யமாக இருந்தாலும், திரைக்கதையாக பல இடங்களில் சறுக்குகிறது படம். உதாரணமாக திடீரென ஒரு காட்சியில் ஹீரோவின் அம்மா பாத்திரம் நகரத்துக்கு வந்து அவருடன் தங்கும் காட்சி வருகிறது. பின்னர் அவர் ஊருக்கே அனுப்பப்படுகிறார். அந்தப் பாத்திரம் இங்கு வந்ததால் கதைக்குள் நடந்தது ஒன்றுமே இல்லை. இப்படியான காட்சிகள்தான் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன. ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பதோ, அவமதிப்பதோ தவறு என சொல்லும் விஷயம் சரியானது, வரவேற்புக்குரியது. ஆனால் அதை மிகவும் வலிந்து திணித்துச் சொன்ன விதமும், அதில் எங்குமே சுவாரசியம் இல்லாததும்தான் படத்தில் பிரச்னை.
கலகலப்பாக படத்தைக் கொடுக்க முயன்றதுபோல, கதை திரைக்கதை, மேக்கிங்கில் கவனம் செலுத்தி இருந்தால் உண்மையிலேயே ஆடியன்ஸுக்கு ஹேப்பியை கொடுத்திருப்பார் இந்த ஹேப்பி ராஜ்.