கிராமத்து ஹீரோவுக்கும், பணக்கார வில்லனுக்குமான ஈகோ மோதலே இட்லி கடை பட ஒன்லைன்!
மதுரையில் சின்னதாக ஒரு இட்லி கடையை நடத்திக் கொண்டிருக்கும் பெரியவர் சிவ நேசன் (ராஜ் கிரண்), அவரது மகன் முருகன் (தனுஷ்). சிறிய வருமானம், சொந்த ஊரிலேயே நிம்மதியான வாழ்வே நிறைவு என நினைக்கும் மனம் சிவ நேசனுக்கு. நிறைய பணம், கார்-பாங்களா, என்ற பெரிய கனவுகள் முருகனுக்கு. சொந்த ஊர், தாய் தந்தையை பிரிந்து, பேங் காங் சென்று விஷ்ணு வர்தன் (சத்யராஜ்) நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கிறார். அவரது மகள் மீரா (ஷாலினி பாண்டே) முருகனை காதலிக்க திருமண வேலைகள் பரபரப்பாக நடக்கிறது. எதிர்பாரா விதமாக முருகனின் பெற்றோர்கள் இறந்துவிடுகிறார்கள். இறுதி காரியங்கள் செ ய்ய மதுரை வரும் முருகன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவும், ஊர் மக்களின் பிணைப்பை பெறவும் தன் அப்பாவின் இட்லி கடையை மீண்டும் திறக்கிறார்.
திருமணம் நின்றால் அவமானம் ஆகிவிடும் என விஷ்ணு வர்தன், தன் கடைக்கு போட்டி ஆகும் என மாரி (சமுத்திரக்கனி), பெற்றோரை தவிக்க விட்டு சென்றார் என முருகன் மேல் கயல் (நித்யா மேனன்) போன்றோர் கோபமாக இருக்கின்றனர். இவை தாண்டி விஷ்ணு வர்த்தனின் மகன் அஸ்வின் (அருண் விஜய்) - முருகன் இடையே உரசல் ஏற்பட, அது பகையாக மாறுகிறது. முருகன் நினைத்தபடி இட்லி கடையும், ஊர் மக்களும் அவர் வசம் ஆகிறதா, கயலின் கோபம் தீர்ந்ததா? அஸ்வின் பகை முடிந்ததா? என்பதெல்லாம் தான் இட்லி கடையின் மீதிக்கதை.
அன்பால் வளர்க்கப்பட்ட மகனும், வசதியாய் வளர்த்து அடம் பிடிக்கும் மகனுக்குமான மோதலை மையமாக வைத்து கதையை எழுதி இருக்கிறார் தனுஷ். அதில் சொந்த ஊரின் பாசம், ஊர் மக்களின் அன்பு, பெற்றோரை பிள்ளைகள் கவனிக்க வேண்டும், வன்முறை தவறு, அகிம்சை முக்கியம் என்ற கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.
தனுஷ் எப்போதும் போலவே மிக இயல்பான அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். எதையோ இழந்தது போல தவிப்பதும், ஊர் மக்கள் தன்னை ஏற்று கொண்டதும் முகத்தில் காட்டும் நிம்மதியும் என அட்டகாசமான நடிப்பு. கெஸ்ட் ரோல் என்றாலும் ராஜ் கிரண், கீதா கைலாசம் நடிப்பு படத்திற்கு தேவையான அழுத்தம் சேர்த்துத்திருக்கிறது. பிடிவாதமான வில்லன் ரோலில் அருண் விஜய் மிக கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். தனுஷை சீண்டுவது, வம்பிழுப்பது, எப்படி பழி வாங்குவது என தெரியாமல் திணறுவது என்று நல்ல நடிப்பு. நித்யா மேனன் முதலில் தனுஷை தவறாக புரிந்து கொள்வது, பின்பு தன் காதலை ஒளிவு மறைவாக வெளிப்படுத்துவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். தனுஷ் கூடவே வரும் பாத்திரம் இளவரசுக்கு. காமெடி + எமோஷனுக்கு நன்றாக உதவுகிறார். உள்ளூர்காரனாக வரும் சமுத்திரக்கனி சில கவுண்டர்களில் கவனிக்க வைக்கிறார். சத்யராஜ் மகனை விட்டுக் கொடுக்க முடியாமல், நியாயமாகவும் நடந்து கொள்ள முடியாமல் தவிக்கும் நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார்.
ஜி வி பிரகாஷ் பாடல்களில் எஞ்சாமி தந்தானே, எத்தன சாமி, குல சாமி போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கிறது. சில எமோஷன் காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு ஊரின் மண் மணத்தை அப்படியே திரையில் கடத்தி இருக்கிறது.
இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால் படத்தின் மைய பிரச்சனை அருண் விஜய் - தனுஷ் இடையேயான ஈகோ என்ற இடத்திற்கு வர திரைக்கதை நெடுநேரம் எடுத்தக் கொள்கிறது. அதைத்தான் சொல்ல வருகிறார்கள் என்றால், இன்னும் கொஞ்சம் தெளிவாக அதை நோக்கி திரைக்கதை இருந்திருக்கலாம். மேலும் ஒரு உணர்வுப் பூர்வமான படத்தில் எல்லாவற்றையும் வசனத்தை வைத்தே பார்வையாளர்களுக்கு கடத்துவது. அகிம்சை, குல தெய்வம் போன்றவற்றை ராஜ் கிரண் விளக்குவது போல, படம் நெடுக பல விஷயங்களை விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவற்றை கொஞ்சம் காட்சிகளாக மாற்றி இருக்கலாம்.
மொத்தத்தில் கருத்து கொஞ்சம் குறைவாக, திரைக்கதை சற்று தெளிவாக இருந்திருந்தால் இட்லிகடை இன்னும் பிரம்மாண்டா வரவேற்பு பெற்று இருக்கும். ஆனாலும் ஒரு இதமான படமாக ஈர்க்கவே செய்கிறது.