விக்ரம் பிரபுவின் சிறை web
திரை விமர்சனம்

தவறவிடக்கூடாத சினிமா.. விக்ரம் பிரபுவின் ’சிறை’!

ஒரு கைதியை நீதிமன்றம் அழைத்து செல்லும் காவலரின் கதையே விக்ரம் பிரபு நடித்துள்ள ’சிறை’ திரைப்படம்..

Johnson

விக்ரம் பிரபுவின் 'சிறை' திரைப்படம், காவல்துறை மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகளை உணர்ச்சிகரமாகவும் விறுவிறுப்பாகவும் வெளிப்படுத்துகிறது. கதிரவன் என்ற காவலர், விசாரணைக் கைதிகளை நீதிமன்றம் அழைத்து செல்லும் பணியில் ஈடுபடுகிறார். இஸ்லாமிய கைதி அப்துல் ரௌஃபின் வழக்கின் பின்னணி மற்றும் காதல் கதையை அறிந்து, கதிரவனின் மனநிலை மாறுகிறது. இந்த சினிமா, உண்மை சம்பவங்களை தரமான அனுபவமாக மாற்றுகிறது.

கதிரவன் (விக்ரம் பிரபு) வேலூர் சிறையில் விசாரணை கைதிகளை நீதிமன்றம் அழைத்து சென்று திரும்ப அழைத்து வரும் Armed Reserve பணியில் இருப்பவர். அப்படி அழைத்து செல்லும் ஒரு கைதி தப்பி செல்லும் போது, துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுகிறார் கதிரவன். இந்த கொலை வழக்கிற்கு விளக்கம் கேட்டு விசாரணை கமிஷன் நடக்கிறது. இந்த சூழலில், ஐந்தாண்டுகளாக விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ரௌஃபை (LK அக்ஷய் குமார்) சிவகங்கை நீதிமன்றம் அழைத்து சென்று திரும்ப அழைத்து வர வேண்டும் என்ற கட்டாயம் வருகிறது கதிரவனுக்கு. ஒரு இஸ்லாமிய கைதி என்ற மெத்தெனத்தோடு அணுகும் கதிரவன், மெல்ல மெல்ல அப்துல் பற்றியும், அவன் காதல் பற்றியுமான, பின்கதையை கேட்டறிகிறார். இதன் பின் என்ன ஆனது? அப்துல் வழக்கு என்ன ஆகிறது? அவனது காதல் என்ன ஆனது? என்பதை எல்லாம் சொல்கிறது 'சிறை'.

சிறை

விசாரணைக் கைதியை நீதிமன்றம் அழைத்து செல்லும் பயணத்தின் ஊடாக, காவல்துறை எவ்வளவு கட்டுப்பட்டித்தனமாக இயங்குகிறது என்பதையும், நீதித்துறை எவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது என்பதையும் காட்டி இருக்கிறார்கள் கதாசிரியர் தமிழரசனும், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியும். அதே வேளையில் ஒரு Police Procedural Drama படத்தை இவ்வளவு Engaging, Emotional, Commercial ஆகவும் கொடுத்ததையும் கவனிக்க வேண்டும்.

விக்ரம் பிரபுவின் சிறந்த நடிப்பு..

நடிப்பு பொறுத்தவரை அழுத்தமாக கவர்வது விக்ரம் பிரபு. சமீபகாலமாக 'டாணாக்காரன்', 'இறுகப்பற்று' இப்போது 'சிறை' என சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார். இப்படத்தில் சிஸ்டத்துக்குள் இருந்து இருந்து இறுகிப்போன ஒரு நபராக நடந்து கொள்வதும், முக்கிய பாத்திரத்துக்கு உதவ முடியாமல் கையறு நிலையில் நிற்பதுமாக தனித்துத் தெரிகிறார். ஒரு கொலை செய்துவிட்ட உணர்வு ஏதும் இல்லாமல் தெனாவட்டாக பேசுவதில் துவங்கும் அவரது பாத்திரம், சக உயிருக்கு உதவ முடியும் என்றால் அதை செய்துவிடுங்கள் என்ற இடத்தில் நிறைவடையும் கதாபாத்திர வடிவமைப்பு அட்டகாசம்.

சிறை

அடுத்ததாக ஈர்ப்புது கலையரசி பாத்திரத்தில் நடித்துள்ள அனிஷ்மா அணில்குமார். காதலை காப்பாற்றிக் கொள்ள இறுதிவரை முயலும் நபராக, உணர்வுகள் அத்தனையும் அழகாக வெளிப்படுத்துகிறார். அறிமுக நடிகர் LK அக்ஷய்குமார், கடைசிவரை பணிந்து போகும் ஒரு பாத்திரம். குரலை உயர்த்தும் இடத்தில் தான் இல்லை என தயங்கி தயங்கி நிற்கும் ஒரு நடிப்பை வழங்குகிறார். இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்றாலும், அறிமுக படத்துக்கு இந்த லெவல் நடிப்பு நன்று. இவரின் அம்மாவாக நடித்திருந்த ரெம்யா சுரேஷ், அடாவடி இளைஞராக வரும் ரகு, குடும்ப வன்முறையில் சிக்கி திண்டாடும் இஸ்மத் பானு, ஒரே காட்சி என்றாலும் மாஸ் காட்டும் மூணார் ரமேஷ் என பல பாத்திரங்கள் ஸ்கோர் செய்கிறார்கள்.

சிறை

90களின் இறுதி 2000த்தின் துவக்கத்தில் நிகழும் கதை என்பதால் அதை நேர்த்தி செய்வதில் ஆடை வடிவமைப்பாளர் வர்ஷினி சங்கர் கலை இயக்குநர் ராகவன் சஞ்சீவி கடும் உழைப்பை கொட்டி இருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சியும் மிக தத்ரூபமாக வடிவமைத்துள்ளார் PC ஸ்டண்ட்ஸ். படத்தின் ஆரம்பத்தில் பேருந்தினுள் வரும் ஒரு சண்டைக்காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார செய்கிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு தேவையான பரபரப்பையும், அழுத்தமான காட்சிகளையும் வழங்குகிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு படத்தை கட்சிதமாக கொடுத்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களில் மின்னு வட்டம் பாடல் சிறப்பு. பின்னணி இசை எமோஷனாலான இடங்களில் அழுத்தம் சேர்க்கிறது. ஆனால் பாகுபலி மற்றும் எந்திரன் பின்னணி இசை போலவே ஒரு இசை சில காட்சிகளில் ஒலித்தது ஏனோ தெரியவில்லை.

குறைகள் உள்ளதா?

இப்படத்தின் குறைகள் என சொல்வதென்றால், செயற்கையாக சில திணிப்புகளை திரைக்கதைக்குள் கொண்டு வந்த விதம். AR செல்வதை, ஏதோ கல்லூரி IV போவது போல இரு காவலர்கள் நினைக்கிறார்கள், அதனால் ஒரு தவறு நிகழ்கிறது என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. முக்கியமான பாத்திரம் ஒன்று எதனால் சரண்டர் ஆகும் முடிவுக்கு வருகிறது? விக்ரம் பிரபு மீது ஒரு விசாரணை கமிஷன் இருந்ததை பாதியில் அம்போ என விடுவது, அவரின் மனைவி பாத்திரம் எந்த முழுமையும் இன்றி இருப்பது போன்றவை குறைகளாகப்பட்டது. இடைவேளைக்கு பிறகு படம் மறுபடி வேகம் எடுக்க 20 நிமிடங்கள் ஆவதும் சற்று பொறுமையை சோதிக்கிறது.

சிறை

காவல்துறையோ, நீதித்துறையோ அதற்குள் இயங்கும் நபர்கள் அதிகார ருசியை கண்டுவிட்டால் எதையும் செய்ய தயங்காதவர்கள். இங்கு தொடர்ச்சியாக சொல்லப்படும் சிஸ்டம் என்பது அந்த அரூவமான அதிகார ருசி தான் என்பதை அழுத்தமாக சொன்ன விதத்தில் கவர்கிறது சிறை. அதே நேரம் காவலர்களில் இவ்வளவு நல்லவர்களா என்ற ஆச்சர்யம் வருவதையும் தடுக்க முடியவில்லை. அதன் மூலம் இரு விஷயங்களை இப்படம் முன்வைப்பதாக கொள்ளலாம். ஒன்று காவலர்கள் கொஞ்சம் மனிதத்தோடு பார்க்க துவங்கினால் என்ன மாற்றம் எல்லாம் நடக்கும் என்று இந்த படம் ஒரு கருத்தை முன் வைக்கிறது. இன்னொன்று விசாரணைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படாமல் வாய்தாக்களிலேயே ஆண்டுகளை கடக்கும் வழக்குகளை முடிக்க இந்த சட்ட அமைப்பு என்ன தீர்வை வைத்திருக்கிறது? என்ற கேள்வி. இவை இரண்டுமே முக்கியமானவை.

சிறை

மொத்தத்தில் ஒரு உண்மை சம்பவத்தை தரமான சினிமா அனுபவமாக மாற்றி கொடுத்திருக்கிறது சிறை குழு. தவறவிடக்கூடாத சினிமா.