சினிமா

என்ன சொல்ல வருகிறது ’மெரினா புரட்சி’?

webteam

மெரினா புரட்சியை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாக ஒன்று கூடிய அந்த மக்கள் போராட்டம் உலகெங்கும் பேசப்பட்டது. இந்தச் சம்பவத்தை விறுவிறுப்புக் குறையாத அசல் சினிமாவாக்கி இருக்கிறார், இயக்குனர் எம்.எஸ்.ராஜ். 

‘எனக்கு தெரிஞ்சு இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு இவ்வளவு பெரிய மக்கள் புரட்சி தமிழ்நாட்டுல ஏற்பட்டதா தெரியலை. அரசியல் அமைப்பு, தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள்னு யார் ஆதரவும் இல்லாம இப்படியொரு எழுச்சிப் புரட்சி எப்படி சாத்தியமாச்சுன்னு எல்லாருக்குமே கேள்வி எழுந்துச்சு. அந்தக் கேள்வி என்னையும் ஆச்சரியப்படுத்திட்டே இருந்தது. நானா புலனாய்வு செய்ய ஆரம்பிச்சேன். இந்த படம் உருவாச்சு’ என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். 

இதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது, ஹாலிவுட் இயக்குனர் மைக்கேல் மூரின் ’ஃபாரன்ஹீட் 9/11’ படம் தானாம்.

எப்படி?

’அமெரிக்காவுல இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அந்தச் சம்பவத்தை வச்சு, தனியா ஒரு ரிசர்ச் பண்ணினார் ஹாலிவுட் இயக்குனர் மைக்கேல் மூர். பின்லேடன் அதுக்கு காரணம்னு தெரிஞ்சாலும் அதைத்தாண்டி அதுக்குப் பின்னால என்னவெல்லாம் மறைஞ்சிருக்குன்னு அவர் ரிசர்ச் செஞ்சு பண்ணின படம்தான் ’ஃபாரன்ஹீட் 9/11’. அது எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு. நானும் அப்படியே மெரினா புரட்சிக்கு பின்னால உள்ள விஷயங்களை ஆராய்ச்சி பண்ணினேன்? எப்படி இவ்வளவு கூட்டம் கூடினாங்க. இதுக்கு பின்னால நடந்த அரசியல் விளையாட்டுகள், கபட நாடகங்கள் பீட்டாவுக்கு பின்னால இருந்த கோரிக்கைகள், அதிகார வர்க்கம் அதை முடக்க எடுத்த நடவடிக்கைகள், அதை இளைஞர்கள் முறியடிச்ச விஷயம் எல்லாத்தையும் இந்த படம் வெளிச்சம் போட்டுக் காட்டும்’ என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.

இதில் மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட நவீன், ஸ்ருதி, ’புட் சட்னி’ ராஜ்மோகன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ப ளம் வாங்காமல் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெரினா போராட்டம்தான் மையம் என்றாலும் ஒரு சினிமாவுக்கான விறுவிறுப்பு இதி ல் இருக்கும் என்கிறார் ராஜ்! அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.