திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், நடிகர் காளி வெங்கட் கதை நாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார். தேனியில் இதற்கான முதற்கட்ட படபிடிப்பு நடந்து வருகிறது. இந்தசூழலில் தான், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் இயக்கும் புதிய திரைப்படமான “குக்கர்” படத்தின் தலைப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வின் போது, நடிகர் காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
2003ம் ஆண்டில் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கரு. பழனியப்பன். தொடர்ந்து, பல படங்களை இயக்கி வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அவர் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. எனினும், திரைப்படங்களில் நடிப்பது, தொலைக்காட்சித் தொடர்களை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில் தான், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.