ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள போர், உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதுகுறித்து நடிகர் மம்மூட்டி நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், பிப்.28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, ஈரான் பதில் தாக்குதலையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் டிவி சந்திரனின் சினிமா வாழ்க்கையின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் மம்மூட்டி பேசினார். அப்போது அவர், "இந்தப் போரில் இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இறுதியில் மனிதநேயம் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். போர் எதற்கும் தீர்வாகாது எனத் தெரிவித்த அவர், அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பல இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் வசித்து வருவதால், அங்குள்ள பதற்றம் கேரளாவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.