Rajamouli Varanasi
சினிமா

ராமர் வேடத்தில் மகேஷ்பாபு, 60 நாட்கள் படமாக்கினோம்! - ராஜமௌலி | SS Rajamouli | Varanasi

எனக்கு பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லை. என் தந்தை, நம் பின்னால் ஹனுமான் இருப்பார், அவர் வழிகாட்டுவார் என கூறுவார். அவர் அப்படி சொல்லும் போது `இதுதான் வழிகாட்டுவதா' எனக் கோபமாக வரும்.

Johnson

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகிவரும் படம் `வாரணாசி'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 100 அடி திரை அமைக்கப்பட்டு, அதில் படத்தின் தலைப்பு வீடியோவை திரையிட்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ராஜமௌலி "எனக்கு பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லை. என் தந்தை, நம் பின்னால் ஹனுமான் இருப்பார், அவர் வழிகாட்டுவார் என கூறுவார். அவர் அப்படி சொல்லும் போது `இதுதான் வழிகாட்டுவதா' எனக் கோபமாக வரும். என் மனைவிக்கு ஹனுமான் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நண்பனைப் போல் அவரோடு உரையாடுவார். அப்போது அவர் மீதும் எனக்கு கோபம் வந்தது. என் குழந்தைப் பருவத்திலிருந்து ராமாயணமும் மகாபாரதமும் எனக்கு பிடிக்கும் என பலமுறை கூறியிருக்கிறேன். மகாபாரதத்தை படமாக எடுப்பது என் கனவு என கூறி இருக்கிறேன். இந்தப் படத்தை துவங்கும் போது ராமாயணத்தின் ஒரு முக்கியமான பகுதியை எடுப்பேன் என நினைக்கவே இல்லை. ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் எழுதும்போது, ஒவ்வொரு காட்சியை ஊகிக்கும் போது நான் மிதப்பதைப் போல உணர்ந்தேன்.

Rajamouli

முதல் நாள், மகேஷ்பாபுவை, கடவுள் ராமரின் உருவத்தில் போட்டோஷூட் எடுத்த போது, எனக்கு உடல் சிலிர்த்தது. எனக்கு ஆரம்பத்தில் சில குழப்பங்கள் இருந்தது, அரைமனதாகவே இருந்தேன். மகேஷுக்கு கிருஷ்ணர் பாத்திரம் சரியாக இருக்கும். ஆனால் ராமர் போன்ற அமைதியான பாத்திரத்திற்கு பொருந்துவாரா என்ற சந்தேகத்துக்கும், கச்சிதமாக இருப்பார் என்ற நம்பிக்கைக்கும் இடையில் ஒரு ஊசலாட்டத்தில் இருந்தேன். பின்பு போட்டோஷூட் செய்து முடித்து, அந்தப் போட்டோவை என் வால்பேப்பராக வைத்தேன். பிறகு யாராவது பார்த்துவிடுவார்களோ என நீக்கிவிட்டேன். இந்தப் படப்பிடிப்பு மிக அருமையாக நடந்தது. 60 நாட்கள் படமாக்கினோம், சமீபத்தில் தான் நிறைவடைந்தது. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் சவாலாக இருக்கிறது. அக்காட்சியில் பல உப காட்சிகள் இருந்தது. அந்த ஒவ்வொரு உப காட்சிகளுமே ஒரு சினிமா போலதான் இருந்தது. எல்லாவற்றுக்கும் புதிதாக யோசிக்க வேண்டும், திட்டமிடவேண்டும். அதை எல்லாம் கடந்து இந்தக் காட்சியை எடுத்து முடித்தோம். அது என் படங்களிலேயே எப்போதும் நினைவில் இருக்கும்படியான காட்சியாக இருக்கும். மகேஷின் படங்களிலும் அது நினைவில் இருக்கும் ஒன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத அளவு அழகாக, வீரமாக, கருணையாக, கோபமாக இருப்பார்.

இந்த நிகழ்வில் நடிகர்கள் யாரையும் பற்றி பேசவேண்டாம் என நினைத்தேன். ஆனால் ஒருவரை பற்றி பேச வேண்டும், மகேஷ். படத்தைப் பற்றியோ, அவர் பாத்திரம் பற்றியோ, அவர் என்ன செய்தார் என்பது பற்றியோ இல்லை. ஆனால் மகேஷ்பாபுவின் குணம் பற்றி சொல்ல போகிறேன், அவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியதை சொல்லப் போகிறேன். நம் அனைவருக்கும் ஒரு அடிக்ஷன் இருக்கிறது, செல்போன் அடிக்ஷன். மகேஷ் பதிவிடும் திரைவிமர்சனங்களை பார்த்தால் அவர் எப்போதும் மொபைல் பயன்டுத்துவார் என நினைப்போம். ஆனால் படப்பிடிப்பு வந்தால், அவர் மொபைலை கையில் வைத்துக் கொள்ளவே மாட்டார். எவ்வளவு நேரம் ஆனாலயும் சரி மொபைல் காரில் தான் இருக்கும், அவர் பணியில் மட்டுமே கவனமாக இருப்பார். வேலை முடிந்து காரில் ஏறும்போதுதான் மொபைலை கையில் எடுப்பார். அதனை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். மகேஷ் இந்த விஷயத்தில் உங்களை போன்று இருக்க நான் மிக கடுமையாக உழைப்பேன்" என்றார்.