நடிகர் ரவி மோகன், ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் சமீபத்தில் பிரபல திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகன் ஆகியோர் மாறிமாறி அறிக்கைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகனும், ஆர்த்தியும், இனி எந்த அறிக்கையையும் வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையின்போது, இருதரப்பும் அமைதியாக இருக்க ஒப்புதல் அளித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இருவரும் தங்கள் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியிடவும், விவாதிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார். இருதரப்பும் தங்களது அறிக்கைகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.