ilaiyaraaja, dude movie x page
சினிமா

'Dude' படத்தில் இடம்பெற்ற பாடல்.. இளையராஜா வழக்கு தொடர அனுமதி.. உயர் நீதிமன்றம் உத்தரவு!

'Dude' திரைப்படத்தில் தன்னுடைய அனுமதியின்றி இரண்டு பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

'Dude' திரைப்படத்தில் தன்னுடைய அனுமதியின்றி இரண்டு பாடல்களை பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீர்த்தீஸ்வரன் இயக்கி பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ, சரத்குமார், ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'Dude'. தீபாவளியையொட்டி திரைக்கு வந்த இப்படம், 5 நாட்களில் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் வரும் திருமண வரவேற்பு காட்சியில், இளையராஜாவின் இசையில் உருவான ’புது நெல்லு புது நாத்து’ படத்தின் கருத்த மச்சான் பாடல் இடம்பெற்றுள்ளது. மேலும், கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடன பயிற்சி செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது, இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், 'Dude' திரைப்படத்தில் தன்னுடைய அனுமதியின்றி இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dude movie

அனுமதியின்றி தம்முடைய பாடல்களை வேறு படங்களுக்குப் பயன்படுத்தியதாக சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட், இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சோனி நிறுவனம் தரப்பில், இளையராஜா பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானங்கள் குறித்த விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. சீலிடப்பட்ட கவரில் வருமான விவரங்களை தாக்கல் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால், சோனி நிறுவனம் தாக்கல் செய்த வருமான விவரங்களை அந்த நிறுவனத்திடமே நீதிபதி திரும்ப ஒப்படைத்தார்.

இளையராஜா

'Dude'திரைப்படம் தொடர்பாக தனியாக வழக்கு தொடர இளையராஜாவை அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.