ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ’மதராஸி’யை உருவாக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்..
மறைந்த நடிகர் விஜயகாந்தை வைத்து ’ரமணா’, விஜயை வைத்து ’துப்பாக்கி’ என ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ’மதராஸி’யை உருவாக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.. அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்துக்குள் துப்பாக்கி கலாசாரத்தை கொண்டுவந்து, சட்டஒழுங்கை சீர்குலைக்க நினைக்கிறார்கள், வில்லன்கள் வித்யூத் மற்றும் ’சார்பட்டா’ சபீர்.. 5 கண்டெய்னர்களில் தமிழகத்துக்குள் கொண்டுவரப்பட்ட துப்பாக்கிகளை புழக்கத்தில்விட அவர்கள் போடும் திட்டத்தை தடுக்க நினைக்கிறார், என்.ஐ.ஏ அதிகாரி பிஜு மேனன்.
இந்த இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்திற்குள் எதிர்பாராத விதமாக சிக்குகிறார், ஹீரோ சிவகார்த்திகேயன். வில்லன்களின் துப்பாக்கி விநியோகத்தை தடுக்கச் செல்லும்போது, எதிரிகளிடம் சிக்கிய சிவகார்த்திகேயன் தப்பித்தாரா? துப்பாக்கி கடத்தலின் பின்னணியில் இருப்பது யார்? இறுதியில் நடந்தது என்ன என்பதே ’மதராஸி’ படத்தின் ஒன்லைன். சினிமாவின் புது வடிவத்துக்குள் மாற முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். காதலிக்காக தன் உயிரையே கொடுக்கவும், பலரின் உயிரை எடுக்கவும் துணியும் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் களத்துக்குள் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
அது எமோஷனலாக சில இடங்களில் வொர்க் ஆனாலும், பல இடங்களில் ப்ராக்டிகலாக வொர்க் ஆகவில்லை. இடையிடையே வரும் லாஜிக் மீறல்கள், நெருடலை ஏற்படுத்துகின்றன. ‘மதராஸி’யில் முருகதாசின் டச் கொஞ்சம் மிஸ் ஆனதுபோல் இருந்தது. ‘மதராஸி’ படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு முடிந்தவரை நியாயம் செய்ய முயற்சித்திருக்கிறார், சிவகார்த்திகேயன். துப்பாக்கியில் வில்லனாக வந்த வித்யூத்தை சண்டைக் காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. ’சார்பட்டா’வில் டான்ஸிங் ரோஸாக அசத்திய சபீர், கொடூர வில்லனாக கவனிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சுதீப்பின் கைவண்ணத்தில் காட்சிகள் கவர்கின்றன. இண்டர்வல் ப்ளாக், க்ளைமேக்ஸ் என முக்கிய இடங்களில் வரும் சண்டைக் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. இசையாக ’சலம்பல’ பாடலில் ஸ்கோர் செய்கிறார், அனிருத். சண்டைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், பெரும்பாலான நேரத்தில் பின்னணி இசை அலறிக்கொண்டே இருப்பது காதுகளுக்கு சிரமத்தைக் கொடுக்கிறது. ஒட்டுமொத்தமாக கொஞ்சம் ரசிக்க, கூடுதலாக விமர்சிக்கவைக்கும் படமாக வெளியாகி இருக்கிறது, ’மதராஸி’.