Little Hearts Mouli, Shivani Nagaram
சினிமா

தெலுங்கு சினிமாவை கலக்கும் `Little Hearts'.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா?|Mouli Talks

காதல் பற்றி, சாதி பற்றி, மோடி சர்க்கார் பற்றி, பெற்றோரின் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பது பற்றி என பல விஷயங்களை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார்கள்.

Johnson

மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களே தியேட்டர்களில் தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில், ஓர் அறிமுக நடிகரின் படம் பட்டையை கிளப்பி ஓடிக் கொண்டிருக்கிறது.

சத்தமே இல்லாமல் உருவான `லிட்டில் ஹார்ட்ஸ்'

மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களே தியேட்டர்களில் தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில், ஓர் அறிமுக நடிகரின் படம் பட்டையை கிளப்பி ஓடிக் கொண்டிருக்கிறது. சாய் மார்த்தாண்ட் இயக்கத்தில் மௌலி தஞ்சு பிரசாத் - ஷிவானி நகரம் நடித்து செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான `லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற தெலுங்குப் படம்தான் அது.

Little Hearts

Mouli Talks என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் மௌலி பிரசாத். கடந்த ஆண்டு ETV ஓடிடி தளத்தில் வெளியான 90's Middle Class Biopic என்ற சீரிஸில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார் மௌலி. இந்த சீரிஸின் இயக்குநர் ஆதித்யா ஹசன் தயாரிக்க, `லிட்டில் ஹார்ட்ஸ்' படம் துவங்கியது. இப்படி சின்னதாக சத்தமே இல்லாமல் உருவான படம், இப்போது தெலுங்கு சினிமாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பிரபலங்களின் பாராட்டுகள், இன்னொரு பக்கம் திரையிடும் ஷோ எல்லாம் ஹவுஸ் ஃபுல்லாக ஓடும் படம் என எங்கும் லிட்டில் ஹார்ட்ஸ்தான் ட்ரெண்டிங். படத்தின் ஹீரோவை, தமிழுக்கு பிரதீப் ரங்கநாதன், மலையாளத்துக்கு நஸ்லென், தெலுங்கில் மௌலி என கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது படத்தில்?

EAMCET தேர்வில் தோல்வியடையும் அகில், கோச்சிங் சென்டரில் சேர்கிறார். அங்கு அவர் சந்திக்கும் கார்த்தியாயினி மீது காதல் வருகிறது. இதன் பின்னணியில் காதல் பற்றி, சாதி பற்றி, மோடி சர்க்கார் பற்றி, பெற்றோரின் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பது பற்றி என பல விஷயங்களை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார்கள். படத்தின் பெரிய ஹைலைட் மௌலியின் காமெடி டைமிங்தான். ஒவ்வொரு விஷயத்தையும் தன்னுடைய யூடியூப் வீடியோ பணியில் பகடி செய்வது, நண்பனை தூது அனுப்ப தயார் செய்வது, தம்பியிடம் காதலுக்கு உதவி கேட்பது என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தி இருக்கிறார், மெளலி.

LIttle Hearts

ஒரு சின்ன கேப்  கிடைத்தாலும் அதில் மௌலியும், அவர் நண்பர் போடும் கவுண்டர்கள் எல்லாம் குபீர் ரகம். தன் காதலிக்கு மௌலி போடும் பாடல், காதல் தோல்வியின்போது வரும் சோக பாடலைக்கூட ஸ்பூஃப் செய்து வரும் பாடல் என படத்தின் மூலை முடுக்கெல்லாம் காமெடியை தூவி இருக்கிறார்கள். தொடர்ச்சியாக தெலுங்கு சினிமாவை பின்தொடரும் ரசிகர்களுக்கு, படத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில சினிமா ரெஃபரன்ஸ் எல்லாம் சிறப்பான அனுபவத்தை தரும்.

ரூ.7 கோடிக்கும் அதிகமாக வசூல்

தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட், பிரம்மாண்ட கதைகள், மிதமிஞ்சிய வன்முறைகள் எனப் பார்த்துப் பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்கு, ஒரு புத்துணர்ச்சியான சினிமா அனுபவத்தை கொடுத்திருக்கிறது, இந்த லிட்டில் ஹார்ட்ஸ். அதனாலேயே இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ரூ.2 கோடி செலவில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் மூன்று நாட்களில் இந்திய அளவில் ரூ.7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தொடர்ச்சியாக அரங்கம் நிறைந்த காட்சிகள் ஓடுவதாலும், அடுத்து பெரிய ஹீரோ படங்கள் ஏதுவும் இல்லை என்பதாலும் இப்படம் இன்னும் மிகப்பெரிய வசூலை பெரும் என சொல்லப்படுகிறது.