பிரபுசாலமன் இயக்கத்தில் 2012ல் வெளியான படம் `கும்கி'. விக்ரம் பிரபுவின் அறிமுகப்படமான இது அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. வசூல் ரீதியிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இமான் இசையமைத்த பாடல்கள் அத்தனையும் ஹிட்டானது என படம் பற்றி பல விஷயங்களை சிறப்பாக கூறலாம்
மலை கிராமம் ஒன்றை மதம் பிடித்த யானையிடம் இருந்து காப்பாற்ற தன் யானையை அழைத்துச் செல்லும் ஹீரோ, அங்கு சென்ற பின் ஏற்படும் காதல் என நகரும் கும்கி படத்தின் கதை. இப்படம் வெளியாகி 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள சூழலில் இப்போது `கும்கி 2' தயாராகி இருக்கிறது. இந்த பாகத்தையும் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுகுமாரே இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பென் ஸ்டுடியோஸ் சார்பில் தவால் கடா தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சென்ற பாகத்தில் வளர்ந்த யானை வந்தது போல, இந்த பாகத்தில் சின்ன யானையை (baby elephant) மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாகத்தில் ஹீரோ யார், மற்ற கதாப்பாத்திரங்களில் யாரெல்லாம் நடித்து இருக்கிறார்கள் என்பதெல்லாம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.