தூத்துக்குடி அருகே உள்ள துவத்தூரில் ஒரு வினோதமான வழக்கம் உண்டு. 80களில் நடந்த ஒரு துர் சம்பவத்தால், கடலுக்குள் யாரும் செல்லக்கூடாது என்ற நடைமுறை உள்ளது. கடலுக்கே வேலி போட்டு வாழும் ஊர்மக்கள், கிடைக்கும் வேலைகளை செய்து ஜீவித்திருக்கிறார்கள். ஆனால் எப்படியாவது பணம் சம்பாரித்து, போட் வாங்குவதை நோக்கமாக கொண்டிருக்கும் கிங்ஸ்டன் (ஜி வி பிரகாஷ்), தூத்துக்குடியில் தாமஸ் (சாபுமோன்) இடம் பணியாற்றி, கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்.
எதிர்பாரா ஒரு இழப்பு ஏற்பட, அதன் பின் கடத்தல் வேலைகள் செய்வதில்லை என முடிவுக்கு வரும் கிங்ஸ்டன், தங்கள் ஊர் கடல் சபிக்கப்பட்டது என சொல்வது வெறும் கட்டுக்கதை என நிரூபிக்க நண்பர்களுடன் மீன் பிடிக்க கிளம்புகிறார். உண்மையில் கடல் சபிக்கப்பட்டதா? அதன் பின் இருக்கும் கதை என்ன? கிங்ஸ்டன் மற்றும் குழு திரும்பி வந்தார்களா என்பதெல்லாம் மீதிக்கதை.
தமிழில் ஒரு ஃபேண்டஸி த்ரில்லர் படத்தை கொடுக்க முயன்றதற்கும், அதற்கு கடலை களமாக்கியதும் புது முயற்சி. சபிக்கப்பட்ட கடல், மக்களின் வாழ்வாதாரம், மனம் மாறும் ஹீரோ என பல விஷயங்களை திரைக்கதையில் வைத்து நகர்த்திய விதமும் கவனிக்க வைக்கிறது. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு, எஸ் எஸ் மூர்த்தியின் கலை இயக்கம் போன்றவை இயக்குநரின் கற்பனைகளுக்கு உருவம் கொடுக்கிறது. சிஜி காட்சிகள் சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும், முயற்சியாக அவை பாராட்ட வேண்டியதே.
படத்தின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டிய அளவில், படத்தை பாராட்ட முடியவில்லை என்பதே சோகம். இது ஒரு ஃபேண்டஸி கதை என்பதெல்லாம் ஒக்கே. ஆனால் அதை நம்பவே முடியாத அளவில் துளியும் லாஜிக் இல்லாமல் என்னென்னவோ சொல்லப்படுகிறது. தங்கத்தை வைத்து வரும் ஃப்ளாஷ்பேக், கடலுக்குள் செல்பவர்களின் மரணம் என படத்தின் ஆதார புள்ளியிலேயே எந்த நம்பகத் தன்மையோ, நம்மை நிமிர்ந்து அமர செய்யும் அளவுக்கு ஆர்வமூட்டும் விஷயமோ இல்லை. முதல் பாதி வரையில் கூட ஓரளவுக்கு நகரும் கதை, கடலுக்குள் சென்றபின் நங்கூரம் இட்ட கப்பல் போல் அங்கேயே நின்றுவிடுகிறது.
கடல் அடக்கம் என்ற விஷயத்தில் தான் கதை துவங்குகிறது. அதுவே நமக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடல் அட்டைகளை கடத்தும் முதலாளி மோசமானவன் என்பது கிங்ஸ்டனுக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். ஆனால் அவர் என்ன கடத்துகிறார் என்ற விவரம் கூட அறிய முற்படாதது ஏன்?
தொடர்ந்து கன்னிகளை பலி இடுவது, சென்றதும் தங்கள் போட்டையே வேறு திசையிலும் பார்க்கும் கிங்ஸ்டன் குழு, கன்னிகளின் ஆவிகள், சச்சின் பட லொக்கேஷன் போல பனிமூட்டம் ஆகும் கடல், ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டு வந்து பயமுறுத்த முயற்சிக்கும் மான்ஸ்டர் என எதுவும் எடுபடவில்லை. ஐடியா லெவலில் இவை ஒரு ஆர்வத்தைக் கிளப்பினாலும், கடல் பயணத்தின் ஒவ்வொரு நகர்விலும் ஒவ்வொரு சிக்கல் என்பது பார்வையாளர்களுக்கு அலுப்பையே ஏற்படுத்துகிறது.
அதைவிட முக்கியமாக, இது நடக்கிறது சரி, இவை ஏன் நடக்கிறது என்ற கேள்வி படத்தின் ஒவ்வொரு காட்சியின் போதும் நமக்கு எழுகிறது. சவப்பெட்டி மேல் கை வைத்ததும் அதற்குள் இருந்த ஆன்மா அமைதியானது எனச் சொன்னது கூட ஓக்கே, ஆனால் அது யார் கை என சொல்லும் போதெல்லாம் நம்மை டென்ஷனின் உச்சிக்கு கொண்டு செல்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு ஒரு பைரட்ஸ் ஆஃப் கரீபியன் சாயலை இசை மூலம் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் அதுவும் பெரிதாக வேலைக்கு ஆகவில்லை. பாடல்களின் ராசா ராசா மட்டும் முனுமுனுக்க வைக்கிறது.
நடிப்பு பொறுத்தவரையிலும், ஜிவி தனது வழக்கமான நடிப்பையே இதிலும் கொடுத்திருக்கிறார். அந்த ஊருக்கான பாஷையை அவர் பேச முயற்சிப்பது, மிகப் போலியானதாகவே தெரிகிறது. திவ்யபாரதி கதாப்பாத்திரமும் மிக சாதாரணமாகவே வந்து போகிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் இல்லை என்றாலும் படத்தில் எதுவும் மாறப்போவது இல்லை. சேத்தன், அழகம்பெருமாள் தங்கள் அனுபவத்தை நடிப்பின் மூலம் காட்டியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு எபிக் கதையை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள், ஆனால் கதையில் அந்த ஆழமும் இல்லாமல் மேம்போக்காக இருப்பதால், நம்மைக் கவரவில்லை