Ilaiyaraaja Karthik Subbaraj
சினிமா

'வனக்கிளியே' என ராஜா தொடங்கியபோது..’ பாடல் உருவான தருணத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ்!

டோரதி படத்தில் இளையராஜா இசையமைத்த முத்துமணி பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் கலக்கி வருகிறது.

Rishan Vengai

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘டோரதி’ படத்திற்காக இளையராஜா இசையமைத்த ‘முத்துமணி’ பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 83 வயதிலும் ராஜாவின் குரல், இசை ரசிகர்களை ஆச்சரியப்படுத்த, அவர் ‘வனக்கிளியே’ என ஹார்மோனியத்தில் பாடத் தொடங்கிய தருணம் கனவுலக அனுபவம் போல இருந்ததாக கார்த்திக் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவரவிருக்கும் படம் ’டோரதி’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கும் நிலையில், இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ilayaraja muthumani song

முதல் பாடல் ’கல்யாண விருந்து’ வரவேற்பை பெற்றநிலையில், இரண்டாவது பாடலாக இளையராஜா குரலில் வெளியான ‘முத்துமணி’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. டிரான்ஸ் (Trance) என்ற மின்னணு நடன இசையின் வடிவத்தில் வெளிவந்திருக்கும் முத்துமணி பாடல், இளையராஜா மற்றும் ஸ்வேதா மோகனின் கொஞ்சும் குரலில் பாடப்பட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை இளையராஜாவே எழுதியுள்ளார்.

83 வயதிலும் இளையராஜாவின் இசையும், குரலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும் நிலையில் சமூகவலைதளம் முழுவதும் முத்துமணி பாடல் பேசுபொருளாகியுள்ளது.

’இந்நிலையில் பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு பிறகு, அப்பாடல் உருவான விதம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், ”இசையமைப்பாளர் ராஜா சாருடன் #Dorothy படத்திற்காக நான் பணியாற்றிய முதல் நாள், அந்த மாயாஜால ஹார்மோனியத்தில் அவரது மந்திரக் கைகள் 'முத்துமணி' பாடலுக்கு இசையமைத்ததோடு தொடங்கியது. அந்தத் தருணத்தைக் காணும்போதே நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டேன்; அது ஒரு கனவுலக அனுபவமாக இருந்தது. ராஜா சார் 'வனக்கிளியே' என பாடலைப் பாடத் தொடங்கியபோது, ​​அந்தத் தருணத்தில் என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.. ஏதோ ஒரு வேறொரு உலகத்திற்கு மிதந்து செல்வது போலவும், மனதிற்குள் ஒருவிதமான ஆறுதல் கிடைப்பது போலவும் உணர்ந்தேன்.. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன...

இப்போது, ​​அந்தப் பாடலுக்கு உங்கள் அனைவரிடமிருந்தும் அதே போன்ற உணர்வுபூர்வமான எதிர்வினைகளைக் காண்பது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியை அளிக்கிறது... ஆம்... ராஜா சார் நம் இசையின் கடவுள்; அவரது குரல் என்பது கடவுள் நம்மிடம் பேசும் ஒரு வழியாகவே அமைகிறது” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.