மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது. இந்தவரிசையில், சென்னையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்றார்.
இதற்கு கர்நாடகா முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. 'கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் ,படம் வெளியானால் திரையரங்குகளுக்கு தீ வைக்கப்படும் என கன்னட அமைப்புகள் எச்சரித்தனர்.
ஆனால், நடிகர் கமல், 'மன்னிப்பு கேட்க முடியாது' என கூறிவிட்டார். எனவே, கர்நாடகாவில் கமல் படங்களுக்கு தடை விதிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தீர்மானித்து உள்ளது.
இதற்கிடையே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் வர்த்த சபையில் முடிவுக்கு துணை நிற்பதாக தெரிவித்தார்.
முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவிக்கையில், கன்னட மொழி தொடர்பான கமல்ஹாசனின் பேச்சை அரசியலாக்க வேண்டாம் , நாம் அண்டை மாநிலத்தவர்கள், ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் , நாம் எதிரிகள் கிடையாது அனைவரும் நண்பர்கள் எனவும் தெரிவித்தார்.
இந்தநிலையில், தக் லைஃப் படம் கர்நாடகாவில் சுமுகமான முறையில் வெளியாக உரிய பாதுகாப்பு அளிக்க கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கமல் பேசியதற்கும், இத்திரைப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று நீதிபதி நாக பிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் கமலிடம் சரமாறியான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அதில்,” நீங்கள் எந்த அடிப்படையில் பேசினீர்கள். தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? . நீங்கள் வரலாற்று ஆய்வாளரா, மொழியல் வல்லுநரா ? . கமல்ஹாசன் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு. அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது.
ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும். உங்கள் கருத்தால் சிவராஜ் குமாருக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 300 கோடி ரூபாய் இப்படத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறீர். இவ்வளவு செலவு செய்து படம் எடுக்குறீர்கள். ஆனால், ஒரு மன்னிப்பு கேட்க முடியாத. மன்னிப்பு கேட்பதில் என்ன பிரச்னை இருக்கிறது? “ என்று பல கேள்விகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்தது கர்நாடக நீதிமன்றம்.