கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், சிவராஜ் குமார். தமிழிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்திலும், நடிகர் தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நடித்திருந்தார். அவர் கடைசியாக, ’பைரவி ரணகல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி வெளியானது.
இதற்கிடையில் நடிகர் சிவராஜ் குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனக்கு உடல்நல பிரச்னை இருப்பதாகவும், அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் சிவராஜ் குமாருக்கு என்ன பிரச்னை என்பது குறித்த தகவல் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவருக்கு புற்றுநோய் இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியானது. இதற்காகத்தான் அவர் அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் அங்கு அவருக்கு இது தொடர்பாக அறுவைசிகிச்சை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இதற்கு நடிகர் சிவராஜ் குமார் விளக்கம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் அளித்த விளக்கத்தில், “எனக்கு ஒரு நோய் இருப்பது உண்மைதான். அதற்காக நான் அமெரிக்கா செல்வதும் உண்மைதான். ஆனால் அது புற்றுநோய் அல்ல. இன்னும் அது என்ன நோய் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் நலமுடன் இந்தியா திரும்புவேன்” எனக் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.