Kalyani Priyadarshan Lokah
சினிமா

"16 மணிநேர வேலை, ஞாயிறு விடுமுறை இல்லை" - பணிநேரம் பற்றி கல்யாணி ப்ரியதர்ஷன் | Kalyani Priyadarshan

இது நடிகர்களை மட்டும் சார்ந்தது கிடையாது, பல தொழிலார்கள் இருக்கிறார்கள். சினிமாவில் பணி நேரத்தை எப்போதும் நிலையாக முடிவு செய்ய முடியாது. ஒரு நாள் படப்பிடிப்பு சரியாக நடக்க நூறு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டிய அவசியம் இருக்கும்.

Johnson

சினிமாவில் பணிநேரம் குறித்த பேச்சுக்கள் சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தாயான பின்பு சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இக்கோரிக்கையால் அவர் Spirit மற்றும் Kalki 2898 AD போன்ற சில படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் தன் முடிவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. சமீபத்தில் கரீனா பூர், அனன்யா பாண்டே, கல்யாணி ப்ரியதர்ஷன் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றில் சினிமாவில் மணிநேரம் குறித்த பேச்சு வந்தது. அப்போது பேசிய அனன்யா "தீபிகா தாயாவதற்கு முன்பு நான் அவருடன் பணியாற்றியுள்ளேன். அப்போது அவரிடம் இது போன்று 8 மணி நேர வேலை வேண்டும் என்று கோரும் பழக்கம் எதுவும் இருந்ததில்லை. அவர் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். வொர்க்ஷாப் வைத்தாலும் வருவார். எதற்கும் புகார் அளிக்கவில்லை, எதையும் பிரத்யேகமாகக் கேட்கவும் இல்லை.

Lokah

இப்போது அவர் ஒரு தாய் என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் குழந்தையுடன் இருக்க வேண்டியது அவரது தற்போதைய தேவை. இதன் ஆரம்பமாக கரீனாவை தான் சொல்ல வேண்டும். அவருக்குப் பின் வரும் நடிகைகளுக்காக அவர் விதிகளை மாற்றியமைத்ததார். கரீனா அதைச் செய்ததன் மூலம் அவருக்குப் பின் வரும் அனைத்துப் பெண்களுக்கும் அவர் ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். எனவே, உங்கள் தயாரிப்பாளருடன் பணி நேரம் குறித்துப் பேசுவது ஒரு வாய்ப்பும், சூழலும் உருவாகியுள்ளது. இது தயாரிப்பாளரிடம் தனிப்பட்ட முறையில் பேசி சரிசெய்யப்பட வேண்டிய விஷயம். இவ்வளவுதான் செய்வோம், இவ்வளவுதான் செய்ய வேண்டும் என்று எந்தக் கடுமையான விதியும் இல்லை. இதைப் பற்றிப் பேச அனைவருக்கும் உரிமை உண்டு" என்றார்.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பேசுகையில், "மலையாளத் திரைத்துறையில் பெரும்பாலும் வேலை நேரம் 16 மணி நேரம் வரை நீடிக்கும். இப்போது தான் அதை பேசி 12 மணிநேரமாக மாற்றி இருக்கிறோம். அதுவே எங்களுக்கு இப்போது பெரிய விஷயம். பல ஆண்டுகளாக அதிகாலை 6 மணிக்கு தொடங்கி, இரவு 9.30 வரை படப்பிடிப்பு நீடிக்கும். ஞாயிறு விடுமுறையும் கிடையாது. மேலும் இது நடிகர்களை மட்டும் சார்ந்தது கிடையாது, பல தொழிலார்கள் இருக்கிறார்கள். சினிமாவில் பணி நேரத்தை எப்போதும் நிலையாக முடிவு செய்ய முடியாது. ஒரு நாள் படப்பிடிப்பு சரியாக நடக்க நூறு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டிய அவசியம் இருக்கும். இதை எல்லாம் மனதில் வைத்து கூட சொல்கிறேன், ஒவ்வொரு நபருக்கும் மரியாதையும் ஓய்வும் அவசியம் தேவை. இப்போது 8 மணிநேர வேலை நேரம் என்ற பேச்சு இருந்தாலும், ஒரு போதும் அந்த நேரத்துக்குள் வேலை முடியும் என எந்த உறுதியும் இல்லை. ஆனால் எல்லாத்தும் ஒரு துவக்கம் வேண்டும். அந்த துவக்கமாக இதனை நாம் பார்க்க வேண்டும்" என்று அவர் விளக்கினார்.