அருமையான கான்செப்ட், படமாக ஈர்க்கிறதா? | Kadhal Reset Repeat Review | Vijay
அருமையான கான்செப்ட், படமாக ஈர்க்கிறதா? | Kadhal Reset Repeat Review(1.5 / 5)
காதலின் பொருட்டு நடக்கும் ரீசெட்டும், ரிப்பீட்டும் தான் படம்!
'ஃப்ளை ஹை' என்ற மியூசிக்கல் பேண்டில் பாடகி அதிதி (ஜியா ஷங்கர்). இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் தன் குழுவினருடன் ஸ்காட்லாந்தில் நடக்கும் இசைப்போட்டியில் கலந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். கூடவே அதே குழுவில் உள்ள ஹரிச்சந்திரனுக்கும் (அர்ஜுன் அசோகன்) அதிதிக்கு காதல். விரைவில் திருமணம் நோக்கி நகரவும் இருக்கிறார்கள். இதனூடே அதிதிக்கு தெரியாமல் அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடரும் நாயகன் சித்தார்த் (மதும்கேஷ்) ஒருதலை ராகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். அதிதி வீட்டில் கட்டாய கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்க, அதிலிருந்து தப்பி ஸ்காட்லாந்து செல்கிறார். அவரை பாலோ செய்து சித்தார்த்தும் ஸ்காட்லாந்து செல்கிறார். அங்கு அதிதி தெரிந்து கொள்ளும் உண்மை, சித்தார்த் - அதிதி - ஹரிச்சந்திரன் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுமே கதை.
நாயகனாக மதும்கேஷுக்கு முதல் படம். யாரிடமும் அதிகம் பேசாத அக்மார்க் இன்ட்ரோவெர்ட் இளைஞர் பாத்திரம். நடிப்புக்கு அலட்டிக்க தேவை இல்லாத பாத்திரம் என்றாலும், அந்த மீட்டருக்கும் கீழே தான் இருக்கிறது அவரது நடிப்பு. எந்த உணர்வுக்கும் உயிர் கொடுக்காமல் வந்து போகிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ. நாயகி ஜியா சங்கர் தனக்கு என்ன நடக்கிறது என்ற குழப்பம், காதலனுடன் ரொமான்ஸ், குடும்பத்தினர் புறக்கணிப்பதன் வலி என பல உணர்வுகளை கடத்த கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். மலையாளத்தில் திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் அர்ஜுன் அசோகனுக்கு வெல்கம். கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் எந்த ஆழமும் இல்லை என்றாலும், தன்னுடைய நடிப்பால் மட்டுமே அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு கேக் வாக் ரோல், அதை அசால்ட்டாக செய்கிறார். ஆங்காங்கே அவரது ரியாக்ஷன்கள் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் அவர் பேசும் வசன காமெடிகள் படு பழசாக இருக்கிறது. இவர்கள் தவிர, ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் படத்தில் இருக்கின்றனர்.
இப்படத்தின் கதையே நாயகனுக்கு நாயகி மேலே ஏற்படும் உணர்வு, அவளை காக்க போராடும் அவரது காதலும் தான். ஆனால் கொஞ்சம் கூட எமோஷனலாக அந்த விஷயங்கள் எதுவும் நமக்கு கனெக்ட் ஆகவில்லை. அதிலும் இன்ஸ்ட்டாகிராமில் ஃபாலோ செய்தது போல், எளிதாக ஜியா எங்கு போனாலும் ஃபாலோ செய்வது, நினைத்த நொடியில் ஃபிளைட் ஏறுவது என சுத்தமாக நம்ப முடியாத விஷயங்களை தான் நாயகன் செய்கிறார். நாயகிக்கு தன்னுடைய அப்பாவிடம் தன் காதலனை பற்றி சொல்லி புரிய வைப்பதிலோ, கட்டாய திருமணத்தை நிறுத்துவதிலோ என்ன பிரச்னை என்பதும் புரியவில்லை. அர்ஜூன் அசோகன் பாத்திரமும் படு பலவீனமாக எழுதப்பட்டிருந்தது.
Anterograde Amnesia என்ற மறதி நோய் பற்றி முதலிலேயே சொல்லி புரிய வைத்து விட்டு, பின்னர் அதை வைத்தே பல காட்சிகளை நகர்த்துவது பெரிய சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் எமோஷனல் என வைக்கப்பட்டுள்ள பல காட்சிகள் காமெடியாக தான் இருக்கிறது. உதாரணமாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு பாத்திரத்தை அம்போ என விட்டு செல்வதெல்லாம் என்ன மாதிரியான சிந்தனை என்பதே புரியவில்லை.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஸ்காட்லாந்தை பதிவு செய்யும் காட்சிகள் எல்லாம் அழகு. கதாபாத்திரங்களையும் மிக அழகாக திரையில் கொண்டு வந்துள்ளது. இப்படைத்த தனி ஆளாக தாங்குகிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். பின்னணி இசையை மற்றும் பாடல்கள் எல்லாம் சிறப்பு.
ஆனால் டைட்டானிக் துவங்கி `சங்கத்தில் பாடாத' வரை பல பழைய இசையை கேட்கும் தேஜாவு ஃபீலை கொடுக்கிறார் என்பது பெரிய உறுத்தல். படத்தில் சுவாரஸ்யமாகவோ, புதிதாகவோ எதுவும் இல்லை என்பதால், 2 மணிநேரம் 17 நிமிடங்களே ஓடும் படம் மிக நீளமாக ஓடும் உணர்வை கொடுக்கிறது.
கான்செப்ட் அளவில் இருந்த சுவாரஸ்யம், படத்திலும் இருந்திருந்தால் ஈர்த்திருக்கும் 'காதல் ரீசெட் ரிப்பீட்'.

