நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானார். 2020ல் தொழிலதிபர் கௌதமை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில், நேற்று காஜல் சமூக வலைத்தளங்களில் செய்த பதிவு பரபரப்பை கிளப்பியது.
காஜல் அகர்வாலுக்கு வாகன விபத்து ஏற்பட்டதாகவும், அதில் அவர் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவை வெளியிட்டிருந்தார் காஜல். அதில் "நான் விபத்தில் சிக்கியதாகவும் (இறந்துவிட்டதாகவும்) கூறும் சில ஆதாரமற்ற செய்திகளை நான் கண்டேன். நேர்மையாகச் சொல்வதென்றால், மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில் அது முற்றிலும் பொய்யானது. கடவுளின் அருளால், நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன், மிகவும் நன்றாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். இதுபோன்ற தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். அதற்கு பதிலாக நமது கவனத்தை நேர்மறை மற்றும் உண்மையின் மீது செலுத்துவோம். அன்புடனும் நன்றியுடனும், காஜல்" எனக் குறிப்பிட்டிருந்தார். காஜலின் இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டது.
சினிமா பொறுத்தவரையில் காஜல், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வெளியான சிக்கந்தர் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான கண்ணப்பா படத்தில் பார்வதி வேடத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகும் `ராமாயணா' படத்தில் மண்டோதரி பாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.