”தனது பேத்தி நவ்யா திருமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை” என்று மூத்த நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார். அவர் ’வீ தி வுமன்' மும்பை பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், “தனது பேத்தி நவ்யா நந்தா திருமணம் செய்துகொள்வதை நான் விரும்பவில்லை. திருமணம் என்பது ஒரு நிறுவனமாக காலாவதியாகிவிட்டதை அவளும் (நவ்யா) நம்புகிறாள்” என்றவர், இன்றைய சமூக விதிமுறைகளும் பெற்றோருக்குரிய முறையும் மாறிவிட்டதையும் அவர் விவரித்தார்.
”நான் இப்போது ஒரு பாட்டி. இன்னும் சில நாட்களில் நவ்யாவுக்கு 28 வயது ஆகிறது. இன்றைய இளம்பெண்களுக்கு குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று அறிவுரை கூற எனக்கு வயதாகிவிட்டது. நிலைமை மிகவும் மாறிவிட்டது. இன்றைய இந்தச் சிறு குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் நம்மைவிட புத்திசாலிகள்” என தெளிவுபடுத்தினார். இளைய தலைமுறையினரிடையே திருமணம் குறித்த மனப்பான்மைகள் வளர்ந்து வருவது குறித்து அவரது கருத்துகள் ஆன்லைனில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளன.
முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு அவரது பேத்தி நவ்யா நந்தா, சொந்தமாக பாட்காஸ்ட் ஒன்றைத் தொடங்கியிருந்தார். அப்போது பேசிய ஜெயா பச்சன், “திருமணம் செய்யாமல் உனக்கும் (நவ்யா) ஒரு குழந்தை இருந்தால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை/ எனக்கு உண்மையில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - அவரது மனைவி ஜெயா பச்சனின் மூத்த மகளான ஸ்வேதா பச்சனுக்குப் பிறந்தவர்தான் இந்த நவ்யா நந்தா. அவரது குடும்பப் பெயர் அவரை புகழ் மற்றும் திரைப்படங்களுடன் இணைக்கும் அதேவேளையில், நவ்யா பாலிவுட்டில் அடியெடுத்து வைப்பதற்குப் பதிலாக, அவர் ஒரு தொழில்முனைவோராகவும் சமூக ஆர்வலராகவும் அறியப்படுகிறார். நவ்யா தனது குடும்ப நிறுவனமான எஸ்கார்ட்ஸ் குபோடாவிலும் ஒரு பங்குதாரராக உள்ளார். அவர் நிறுவனத்தில் 0.02% பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.7 கோடி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.40,000 கோடி ஆகும்.