விஜய், ஜேசன் சஞ்சய் எக்ஸ் தளம்
சினிமா

’எனக்கு அப்பா கொடுத்த அட்வைஸ் இதான்..’ ஜேசன் சஞ்சய் பகிர்ந்த விசயம்!

தமிழ் திரையுலகில் சிக்மா திரைப்படம் மூலம் இயக்குநராக உருவெடுத்துள்ள நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், அப்பா கொடுத்த அட்வைஸ் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.

Rishan Vengai

ஹாலிவுட் நட்சத்திரம் ஜேசன் ஸ்டாதம் அழைத்தால், அப்பா விஜயைத் தான் கூட்டிச் செல்வேன் என கூறிய ஜேசன் சஞ்சய், தந்தை கொடுத்த முக்கிய ஆலோசனையாக, ‘உன் பாதையை நீதான் தேர்வு செய்யவேண்டும், நான் துணையாக இருப்பேன் ஆனால் உனக்காக எதையும் செய்து தரமாட்டேன்’ என்ற வார்த்தைகள் தான் தன் கரியரை வடிவமைக்க வழிகாட்டியதாக தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் `சிக்மா'. விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஜேசன் சஞ்சய் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தன்னுடைய இயக்குநர் அவதாரம் குறித்து பேசிய அவர், "எனக்கு சிறுவயதில் இருந்து ஒரு பழக்கம் இருக்கிறது, கதை சொல்வதில் பெரிய ஆர்வம். படத்தின் கதையாக தான் என்றில்லை, சாதாரணமாக ஏதாவது ஒரு கதை சொல்வது பிடிக்கும். பின்னர் எனக்கு வரக்கூடிய யோசனைகள் அனைத்தையும் எழுத ஆரம்பித்தேன். பின்பு தான் எனக்கு எழுத்தில் ஆர்வம் உள்ளது என புரிந்து, கனடாவில் திரைப்பட துறை பற்றிய படிப்பை படிக்க சென்றேன். அதுதான் எனக்குள் என்ன ஆர்வம் உள்ளது என புரிந்து கொள்ள உதவியது. அங்கு நான் படித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே சில விளம்பரப்படங்களை இயங்கினோம். நான் இயக்குவேன் என் நண்பர்களே அதனை எடுத்து, எடிட் செய்வார்கள்” என பேசியுள்ளார்.

Jason Sanjay

மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம் உங்களை ஹாலிவுட்டில் படம் செய்ய அழைத்தால், இங்கு இருந்து எந்த நடிகரை அழைத்து போவீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், ”அப்பா தான். இரண்டு பேருக்கும் நல்ல காம்பினேசனா இருக்கும். ஜேசன் ஸ்டாதம் இந்த இண்டர்வியூவை பார்க்கணும்னு நினைக்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து தன் வாழ்க்கையில் தன்னுடைய தந்தை கொடுத்த அட்வைஸ் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ’முதலில் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க இடம் அப்பாவிற்கு கிடைத்துள்ளது. அதற்கான பொறுப்பு எனக்கும் இருக்கிறது, நானும் அதை ஜக்கிரதையாக கையாள வேண்டும். நான் எதையும் எடுத்துக்கொண்டு பயணிக்க விரும்பவில்லை, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். என்னுடைய கரியர் பாதையை வடிவமைப்பதில், அப்பா ஒன்றே ஒன்றை மட்டும் தான் சொன்னார். எனக்கான அடையாளத்தை நானே தனியாக உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். உன் பாதையை நீதான் தேர்வுசெய்ய வேண்டும், நீ என்ன செய்தாலும் நான் துணையாக இருக்கிறேன், ஆனால் உனக்கானதை உருவாக்க நீதான் முயற்சிக்க வேண்டும், நானாக எதையும் உனக்காக செய்யமாட்டேன் என்று கூறினார்’ என கூறியுள்ளார்.