விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் வெளியீடு தாமதமானது. தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள இப்படம் விரைவில் சான்றிதழ் கிடைத்தால், இந்த மாதமே வெளியீடு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால், குறிப்பிட்ட தேதியில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை. இதையடுத்து, ஜனநாயகன் படக்குழு, தணிக்கை வாரியத்தின் செயல்பாட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இது, ஜனநாயகன் படக்குழு மற்றும் தணிக்கை வாரியம் இடையே சட்ட மோதலாக உருவெடுத்த நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என தெரியாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் தான், இன்று காலை முதல் ஜனநாயகன் திரைப்படம் மறுத் தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி வந்தது. இந்த சூழலில் ஜனநாயகன் பட தணிக்கை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக படத் தாயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான, கடிதத்தை ஜனநாயகன் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் அளித்திருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், ஜனநாயகன் மறுதணிக்கைக்கு அளிக்கவிருப்பதால், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, இந்த வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் வாபஸ் பெறுவதற்கான பட்டியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு வரும், அதன் பிறகு இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்கை வாபஸ் கொடுப்பார்கள். மேலும், மறுத்தணிக்கைக்கு செல்லும் ஜனநாயகன் திரைப்படம், மறுத்தணிக்கைக்கு உட்படுத்த 20 நாள் வரை ஆகலாம் எனவும் அதன்பிறகு சான்றிதழ் கிடைக்க 5 நாட்கள் வரை ஆகலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம், விரைவிலேயே தணிக்கை சான்றிதழ் கொடுக்கும்பட்சத்தில் இந்த மாதமே ஜனநாயகன் திரைப்படம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.