தளபதி 69 புதிய தலைமுறை
சினிமா

‘நான் ஆணையிட்டால்...’ - எம்.ஜி.ஆர் பாணியில் சாட்டையை சுழற்றும் விஜய்... வெளியானது அடுத்த புகைப்படம்!

ஜன நாயகன் படத்தில் இரண்டாவது போஸ்டரில், எம்.ஜி.ஆர்-ன் ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வருவது போல, விஜய் சாட்டையை சுழற்றியபடி இருக்கிறார்.

ஜெ.நிவேதா

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ‘முழு நேர அரசியலுக்கு வரப்போவதால் 2 படங்களுக்குப் பின் சினிமாவில் இருந்து விலகுகிறேன்’ என அறிவித்திருந்தார் நடிகர் விஜய். இந்த இரண்டு படங்களில் முதல் படமாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான G.O.A.T. அமைந்தது. இது கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி திரையரங்கில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், தன் கடைசி படமாக ஹெச். வினோத் இயக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தளபதி 69

இத்திரைபப்டத்தில் அனிமல் பட வில்லனான பாபி தியோல், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே, பிரேமலு பட நடிகை மமிதா பைஜு மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷ்ன் தயாரிக்கிறது.

இது கமர்சியல் படமாகவும், அதேநேரத்தில் அரசியல் பேசும் திரைப்படமாகவும் இருக்கும் என்று இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருந்த நிலையில், படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70% முடிந்துவிட்டதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜன 26, 2025) காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் படத்தின் பெயரும் வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில், விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்த signature நெய்வேலி selfie போன்றொரு புகைப்படத்தினை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக படக்குழு வெளியிட்டிருந்தது.
ஜன நாயகன் திரைபப்டம்

இந்நிலையில் இரண்டாவது போஸ்டர் தற்போது மாலை 4 மணிக்கு வெளியாகி உள்ளது. அதில், ‘நான் ஆணையிட்டால்’ என்று எழுதப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்-ன் ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வருவது போல, விஜய் சாட்டையை சுழற்றியபடி இருக்கிறார்.

ஜன நாயகன் திரைபப்டம்

இப்படம், தெலுங்கு திரைப்படமான பகவந்த் கேசரியின் ரீமேக்காக இருக்குமோ என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள இரு போஸ்டர்களும் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.