ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' உலகளாவிய வசூலில் 628 கோடியை கடந்தது. தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும் ரஜினியை பிடிக்கவைத்திருக்கும் ஜெயிலர் 2, விஜய்யின் 'லியோ' திரைப்படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தனது வலுவான ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்துவருகிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கிய இந்த காமெடி-ஆக்ஷன் திரைப்படம், அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகி, இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உள்ள பார்வையாளர்களையும் ஈர்த்தது.
வெறும் 9 நாட்களில் உலகளாவிய வசூல் 600 கோடி ரூபாயை கடந்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம், ஏற்கனவே இந்தவருடத்தின் அதிகபட்ச வசூல் படங்களான Drishyam: The Conclusion, ஹனுமான் அன்ஷ், பார்டர் 2 படங்களின் வாழ்நாள் வசூலைக் கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் லியோ திரைப்படத்தின் மொத்தவசூலை உடைத்திருக்கும் ஜெயிலர் 2, தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் முதல் 2 இடத்தையும் ரஜினியின் வசம் ஒப்படைத்துள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம், Sacnilk.com அப்டேட்டின் படி 9 நாட்களில் இந்திய அளவில் 408 கோடி ரூபாய் மொத்த வசூலையும், வெளிநாடுகளில் 219 கோடி ரூபாய் மொத்த வசூலையும் குவித்துள்ளது. இதன் மொத்த உலகளாவிய வசூல் 628 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதன்படி நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த லியோ திரைப்படத்தின் வசூலை ஓரங்கட்டியுள்ளது ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம். லியோ 621 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படும் நிலையில், அதன் ரெக்கார்டை உடைத்துள்ளது ஜெயிலர் 2.
அதுமட்டுமில்லாமல் தமிழ்சினிமாவில் அதிகபட்ச வசூல் செய்த திரைப்படமாக 660 கோடியுடன் 2.ஓ முதலிடத்தில் இருக்கும் நிலையில், விரைவில் அதன் வசூல் சாதனையை முறியடித்து 700 கோடியை தொட்ட முதல் தமிழ்திரைப்படம் என்ற மைல்கல்லை ஜெயிலர் 2 படைக்கவிருக்கிறது. ஒருவேளை இந்தசாதனை நிகழ்த்தப்பட்டால் இனிவரும் தமிழ் சினிமா நடிகர்களால் அதை உடைப்பது சாத்தியமற்றதாகிவிடும், ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்ற ‘Once sun, one moon and One Super Star' வரிகளை தொடர்ந்து One Boxoffice King என்ற பட்டமும் ரஜினியின் வசம் சென்றுவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.