சினிமா

”படத்தால் மனவருத்தம் அடைந்தோருக்கு என் உளப்பூர்வமான வருத்தங்கள்”- ஜெய்பீம் இயக்குநர்

”படத்தால் மனவருத்தம் அடைந்தோருக்கு என் உளப்பூர்வமான வருத்தங்கள்”- ஜெய்பீம் இயக்குநர்

நிவேதா ஜெகராஜா

ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை வன்முறையாளர்களாக சித்தரித்ததாக எழுந்த சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளையொட்டி, அப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிபதாக அமைய வேண்டும் என விரும்பினேன். இத்திரைப்படம் ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆகவே படத்தின் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இக்கட்டான சூழலில் அக்கறையோடு எங்களுடன் நிற்கிற திரையுலகத்தினருக்கும், அரசியல் இயக்கங்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், ஆதரவளித்த முகமறியா அனைத்து நட்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.