ramayana - ar rahman Ramayana Trailer you tube Screenshot / ar rahman instagram
சினிமா

ராமாயணாவில் இஸ்லாமிய இசை..? ‘எல்லோரையும் திருப்திப்படுத்த ஐஸ்க்ரீம் தான் விற்கணும்’ - ரஹ்மான் பதில்

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ராமாயணா திரைப்படத்தில் இஸ்லாமிய இசையாக பார்க்கப்படும் சூஃபி இசையில் பாடல் இயற்றப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.

Rishan Vengai

ராமாயணா திரைப்படத்தின் மங்கள் ராங் பாடல் சூஃபி இசை வடிவில் உருவாக்கப்பட்டதால் விமர்சனங்களை சந்தித்தது. இதற்கு பதிலளித்த ஏஆர் ரஹ்மான், எல்லோரையும் திருப்திப்படுத்த ஐஸ்க்ரீம் விற்கவேண்டும் என கூறி, தனது படைப்பின் மீது விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.

தங்கல் திரைப்பட இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்திருக்கும் படம் ‘ராமாயணா’. ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஸிம்மரின் இசையில் உருவாகியுள்ள இப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

ramayana part 1

மிகப்பிரபல இதிகாசக் கதையான `ராமாயணா' சுமார் ரூ.4000 கோடி பட்ஜெட்டில் திரைப்பட வடிவில் உருவாகியிருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பிரபலமான ராமாயணா தொலைக்காட்சி தொடரில் ஸ்ரீ ராமராக நடித்திருந்த அருண் கோவில், மன்னர் தசரதராக நடித்துள்ளார். அதேபோல ஷோபனா கைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 5 மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்தசூழலில் தான் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஹ்மான் இசையில் வெளிவந்த மங்கள் ராங் பாடல் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. மங்கள் ராங் பாடலானது ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை சித்திரிப்பதாக அமைந்திருக்கும் நிலையில், இப்பாடல் இஸ்லாமிய இசையாக பார்க்கப்படும் சூஃபி இசை வடிவில் உருவாக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பதிலளித்திருக்கும் ஏஆர் ரஹ்மான், எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டுமானால் ஐஸ்க்ரீம் தான் விற்கவேண்டும் என்றும், தனது படைப்பு குறித்த ஒவ்வொரு கருத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஸ்க்ரீன் பத்திரிகைக்கு அளித்ததாக கூறப்படும் பேட்டியில் பேசியிருக்கும் ரஹ்மான், “நான்தான் எனக்கு முதல் விமர்சகன். நான் செய்யும் எல்லாவற்றையும் விரும்பித்தான் செய்கிறேன் என்பதல்ல. நாங்கள் ஒரு விஷயத்தை ஒரே நாளில் முடிவு செய்வதில்லை. சில சமயங்களில் மாதக்கணக்கில் அதனுடன் வாழ்கிறோம். அதற்கென்று ஒரு சிந்தனைச் செயல்முறை இருக்கிறது.

பொதுவாக சில இசை வகை ஊறுகாய் போன்றது. அதை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும்: அது பழசாக பழசாக மேலும் சிறப்பாகிவிடும். மக்கள் சில சமயங்களில் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள். அவர்களால் முழுப் படத்தையும் பார்க்க முடிவதில்லை, இல்லையா? அதனால் அந்தக்காட்சியை பார்க்கும்வரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பிறகு அவர்களே அதைக் கண்டுபிடித்து, 'ஓ, இதனால்தான் நீங்கள் இதைச் செய்தீர்களா என்று சொல்வார்கள்.

ar rahman

இருப்பினும், ஒரு இசைக்கலைஞர் பொதுமக்களின் எதிர்வினைகளைப் பற்றி எந்த அளவிற்கு கவலைப்படலாம் என்பதற்கு ஒரு எல்லை உண்டு. எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டுமானால் நீங்கள் ஐஸ்க்ரீம் தான் விற்கவேண்டும்” என பதிலளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது மங்கள் ராங் பாடல் சர்ச்சையும், அதற்கு ஏஆர் ரஹ்மான் கொடுத்த பதிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.