விஜயின் கடைசி படத்திற்கு `ஜன நாயகன்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. தொண்டர்களுடன் செல்ஃபி எடுப்பது, சாட்டை எடுத்து சுழற்றுவது என இரு போஸ்டர்கள் வெளியான நிலையில், அவற்றை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஹெச் வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், ப்ரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் எனப் பலரும் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பதுதான் இப்போதைய கேள்வியாக எழுந்துள்ளது.
ஏனென்றால் செப்டம்பர் 14ம் தேதி `தளபதி 69' படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட போது போஸ்டரின் கீழே அக்டோபர் 2025 என குறிப்பிட்டிருந்தனர். படப்பிடிப்பை 2024 அக்டோபரில் துவங்கி, 2025 அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டது. அதன் படி அக்டோபர் 4 பூஜை போடப்பட்டு, 5ம் தேதி சென்னையில் பாடல் படப்பிடிப்புடன் துவங்கியது தளபதி 69. எனவே படத்தை 2025 தீபாவளி விடுமுறையை குறிவைத்து அக்டோபர் 17 வெளியிட திட்டமிட்டிருந்தார்கள் என சொல்லப்பட்டது.
ஆனால் நேற்று வெளியான இரு போஸ்டர்களிலும் முன்பு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 2025 இடம்பெறவில்லை. எனவே ஒருவேளை படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. இந்த சந்தேகங்களுக்கு இரு விதமான பதில்கள் சொல்லப்படுகின்றன.
`ஜன நாயகன்' 2026 பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு வரும் பெரிய பண்டிகையையொட்டி படத்தை வெளியிட திட்டமிடுகிறார்கள் என இதற்கு லாஜிக் சொல்லப்பட்டது. ஆனால் அது குறித்த உறுதியான தரவுகள் எதுவும் இல்லை.
இன்னொன்று கண்டிப்பாக அக்டோபரில்தான் `ஜன நாயகன்' வெளியாகும். இப்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதியுடன் இதனை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.