time travel movies
time travel movies pt
சினிமா

‘இன்று நேற்று நாளை’ To ‘மார்க் ஆண்டனி’.. வெற்றிநடைபோட்ட டைம் டிராவல் படங்கள்.. G.O.A.T கதை இதுதானா?

யுவபுருஷ்

தமிழ் சினிமாவில் டைம் டிராவல் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ளும். அப்படி அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவே இதுவரை வெளியான தமிழ் படங்கள் அமைந்துள்ளன. 2015-ல் வெளியான ‘இன்று நேற்று நாளை’ படம் தொடங்கி, கடைசியாக கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம் வரை பல படங்கள் அப்படி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில்தான் நடிகர் விஜய்யின் GOAT படமும் டைம் டிராவல் படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தைப் பற்றி கிடைத்த தகவல்களை பார்ப்பதற்கு முன்பாக, இதுவரை வெளியாகி வெற்றியடைந்த டைம் டிராவல் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

இன்று நேற்று நாளை..

இன்றைக்கும் டிவியில் போட்டால் தவறாமல் பார்க்கும் சயின்ஸ் பிக்‌ஷன் டைம் டிராவல் படம் என்றால் ‘இன்று நேற்று நாளை’தான். தங்களுக்கு கிடைக்கும் டைம் டிராவல் மிஷினை வைத்து, இரு நண்பர்கள் சம்பாதிப்பது, கடந்த காலத்திற்கு சென்று வரும்போது ஒரு நிகழ்வை மாற்றி அதனால் பெரும் பிரச்னையில் மாட்டிக்கொள்வது போன்ற கதைக்களம் விறுவிறுப்பாக படத்தை கொண்டு சென்றது. விஷ்ணு விஷால், கருணாகரனை வைத்து எந்த சிக்கலும் இல்லாமல் கதையை கச்சிதமாக சொல்லியிருந்தார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார். தற்போது பொங்கலுக்கு ரிலீஸாக போகும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கும் இயக்குநர் இவர்தான்!

‘இன்று நேற்று நாளை’ படத்தில் ஒரு காட்சி. அதில் டைம் டிராவல் மிஷினின் உதவியுடன் கடந்த காலத்திற்கு செல்லும் ஹீரோயின், அங்கு பிரசவ வலியால் துடிக்கும் தன் தாயை மீட்டு தானே மருத்துவமனையில் சேர்க்கிறாள். அங்கே செவிலியர்கள் பிரசவம் பார்க்க, தன்னையே குழந்தையாக கையில் ஏந்தி உச்சிமுகர்கிறார் ஹீரோயின். அதனை அருகே நின்று காதலனும் (ஹீரோவும்) ரசித்துப்பார்க்கிறான். இது ஒரு சாம்பிள்தான். இப்படியாக இன்று நேற்று நாளை படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் எல்லாமே அற்புதமாக இருந்தன. ஒருசில லாஜிக் ஓட்டைகளைத் தாண்டி, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் விருந்து வைத்திருந்தார் இயக்குநர்

24

வாட்ச்சில் டைம் மெஷின் கண்டுபிடித்து அதன்மூலம் காலத்துடன் பயணிக்கும் கதையாக வெளியான நடிகர் சூர்யாவின் ‘24’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்பா, பெரியப்பா, மகன் என்று மூன்று பாத்திரங்களை ஏற்று நடித்த சூர்யா, அத்தனையிலும் பின்னி பெடலெடுத்திருப்பார். அந்த அளவுக்கு கால இயந்திரம் என்ற சிக்கலான கதையை விறுவிறுப்பாக காட்டி சுவாரஸ்யமாக படைத்திருந்தார் இயக்குநர் விக்ரம் கே. குமார்.

நித்யா மேனன், சமந்தா என்று இருவரும் கச்சிதமாக நடித்த நிலையில், மூன்று பாத்திரத்திற்கும் நல்ல வித்தியாசத்தைக் காட்டி நடித்திருந்தார் சூர்யா. சுமார் 75 கோடியில் உருவான படம் 115 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிக்கிலோனா

டைம் டிராவல் கதையை சற்று காமெடியாக சொன்னால் எப்படி இருக்கும். அதுதான் டிக்கிலோனா. கார்த்திக் யோகி நடிப்பில் சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோர் கைகோர்த்த டிக்கிலோனா கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பிற்போக்குத்தனமான கருத்துகள், பெண்களுக்கான அட்வைஸ் போன்றவற்றை தவிர்த்திருந்தால் கதை அருமையாக இருந்திருக்கும் என்ற கருத்துகள் மேலோங்கின.

ஒரு காட்சியில் ஒரே நேரத்தில் மூன்று சந்தானங்கள் பேசிக்கொள்வது போன்ற காட்சிகள் எல்லாம் புதிதாக அமைய, பாராட்டைப் பெற்றது படக்குழு. டைம் டிராவல் படம் என்றாலே, அதிகப்படியான கிராஃபிக்ஸ், ஓவர் பில்டப் என்ற பூவையெல்லாம் சுற்றாமல், சிம்பிளான கதையை வைத்து நகர்த்தி காமெடி டைம் டிராவல் கதையாக வெளியானது வரவேற்பை பெற்றது டிக்கிலோனா.

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவுக்கு மாபெரும் கம்பேக் படமாக அமைந்தது மாநாடு. சயின்ஸ் பிக்சன் கதையாக டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து எடுத்த படம் சக்கைப்போடு போட்டது. சிறுபான்மை மதத்தவரை தீவிரவாதி என்று காட்டுவது, பேனர் விழுந்து விபத்து ஏற்படுவது என்று அரசியல் நிகழ்வுகளை கதையோடு காட்சிப்படுத்திய விதம் பலராலும் பாராட்டப்பட்டது. பொதுவாக ஃப்ளாஷ்பேக் என்றாலே பலருக்கு போர் அடித்துவிடும்.

ஆனால் இந்த படத்திலோ, தொடர்ந்து ரிப்பீட்டாக அமையும் காட்சிகளும், அது காட்டப்பட்ட விதமும், அதற்கான பின்னணி இசையும் அனைத்து திசைகளிலும் பாராட்டுகளை வாங்கி குவித்தது. துடிப்பான இளைஞனாக செத்து செத்து பிழைத்து சிம்பு அடக்கி வாசித்த நிலையில், அடடே என்று ரசிகர் பட்டாளம் கொண்டாடியது. எப்போதுமே ஒரு படத்தில் வில்லன் பாத்திரம் எந்த அளவுக்கு வலுவாக எழுதப்படுமோ அந்த அளவுக்குதான் படத்தின் வெற்றியும் அமையும் எனலாம். அந்த வகையில், வில்லனாக எஸ்.ஜே சூர்யா மிரட்ட, வெங்கட் பிரபுவின் மாநாட்டுக்கும் கூட்டம் அலைமோதியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாராட்டைப் பெற்ற ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் படமாக அமைந்தது மாநாடு

மார்க் ஆண்டனி

டைம் டிராவல் என்பதை ஒரு வாட்ச் மூலமாக, சூட்கேஸ் மூலமாக என்று பல வகைகளில் இயக்குநர்கள் சொல்லிச்சென்ற நிலையில், பழைய லேண்ட்லைன் - ஃபோன் மூலமாக டைம் டிராவல் செய்ய வைத்து அசத்தியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

படத்திற்கு விஷால் ஒரு தூண் என்றால், எஸ்.ஜே சூர்யா மற்றுமொரு தூண். நடிகை சில்ஸ் ஸ்மிதா பாத்திரத்தை கதையில் கொண்டு வந்ததும் படத்திற்கு பலமாக அமைந்தது.

G.O.A.T: டைம் டிராவல் கான்செப்டில் விஜய்?

2024 புத்தாண்டு பிறந்த நேரத்தில் நடிகர் விஜய்யின் அடுத்த படம் தொடர்பான அப்டேட்டை கொடுத்து சமூகவலைதளங்களில் படக்குழு பேசுபொருளாக்கியுள்ள நிலையில், இந்த படமும் டைம் டிராவல் படமாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. 1971ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டி.பி கூப்பர் என்பவர் ஒரு விமானத்தை ஹைஜாக் செய்து சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர்களை பெற்றுக்கொண்டு கச்சிதமாக தப்பியதுதான் 1971ல் நடைபெற்ற உண்மை சம்பவம்.

The Greatest of all Time Movie

ஆனால், விமானத்தில் இருந்து பாராசூட் மூலமாக குதித்தவர் அடுத்து என்ன ஆனார் என்பது புதிர்தான் எனினும், சுவாரஸ்யமான இந்த நிகழ்வைப் பற்றி சில படங்களும் வந்துள்ளன. அந்த வகையில், G.O.A.T படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரவை வைத்து, டிபி கூப்பரின் கதையாகத்தான் இருக்கும். அதுவும் டைம் டிராவல் கதையாக இருக்கும் என்று ரசிகர் பட்டாளம் பேசத்தொடங்கியுள்ளது. வெங்கட் பிரபு படம் என்பதால், மாநாடு படத்தைப் போல சுவாரஸ்யமாக இருக்குமென ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அப்படி அமைக்கப்பட்டால், தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கும் மற்றுமொரு நல்ல டைம் டிராவல் படமாக G.O.A.T அமையும்.